பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 257

 

மன்மதனுடைய பாணங்கள் போல் வேலை செய்ய, உள் களத்தை மாறி நாடி- உள்ளேயிருக்கின்ற கள்ளக் குணத்தை வேறாக மூடிவைத்து விருப்பம் காட்டி, மட்டு முற்ற கோதை போத முடி சூடி-வாசனையுள்ள மாலையை நன்றாகத் தலைமுடியில் அணிந்து, மத்தகத்தில்-யானையின் மத்தகத்தில், நீடு கோடு-நிண்டிருக்கும் கொம்புகளை, வைத்தது ஒத்து-வைத்ததை ஒத்து, இன்மார்பினுடு-இனிய மார்பிலே, வட்டம் இட்டவார் உலாவு-வட்டவடிவமாய் கச்சு அணிந்த, முலைமீதே- தனங்களின்மீது, இக்கு வைக்கும் ஆடைவீழ, தடையாயுள்ள ஆடைவிழ-வெட்கி வெட்கப்பட்டு, இயக்கம் ஆனபேரை ஏத்தி-குறிப்பின் வழி நடக்கும் ஆண்களை வஞ்சித்து, முத்தம் ஆடவாயின்-முத்தமிடுகின்ற வாயால், இசை பேசி-இசைதலைப் பேசி, எட்டு-ஆடவர்பால் அணுகுகின்ற துட்ட மாதர்-துஷ்ட மாதர்களின், பாயல் இச்சை உற்று-படுக்கையில் ஆசைப்பட்டு, என் ஆகம் ஆவி எய்த்து-அடியேனுடைய உடலும் உயிரும் இளைத்துப் போய், நித்தம்-தினந்தோறும், மானஈனம் உறலாமோ- மானபங்கம் அடையலாமோ?

பொழிப்புரை

துர்க்கையும் முக்கிளையாகவுள்ள சூலத்தையேந்தியவளு மாகிய காளியின் செங்கையில் ஏந்திய தாளத்தின் ஒலி, தொக்கதிக்க தோததீத என்று ஒலிக்க, சுழன்று வெற்றியுடன் தாள்கள் சுத்த நடனம் புரிகின்ற முதல்வராகிய சிவபெருமானுடைய சொல்லுக்கு இணங்கி உபதேசித்தவரே! திசைகளிலும், பெரிய வானிலும் சென்ற கருவம் படைத்த சூரர்கள் பல வழியாகச் சிதற, அவர்களைத் தாக்கிப்போர் புரிந்த தீரரே! கூரிய வேலாயுதரே! வெட்சி-பிச்சி என்ற பூமாலைகளை அணிந்த திருமார்பினரே! அறிவுள்ளரும் கொச்சைமொழி பேசுபவருமாகிய வள்ளியம்மையாருடன் பொதிய மலையில் குழந்தை முருகனாக விளங்கும் பெருமித முடையவரே! மை பூசிய கண், மன்மதனுடைய கணைபோல் வேலை செய்ய, உள்ளே யிருக்கின்ற, கள்ளக் குணங்கள் தோன்றாத வண்ணம் மூடிவைத்து, விருப்பம் காட்டி, வாசனை பொருந்திய மலர் மாலையைச் செவ்வையாகத் தலைமுடியில் சூடி, யானையின் மத்தகத்தில் நீண்டிருக்கும் கொம்புகள் வைத்தன ஒத்து, இனிய மார்பிலே வட்டவடிவாய் கச்சு அணிந்து அமைந்துள்ள தனங்களின்மீது, தடையாயுள்ள ஆடைவிழ, வெட்கப்பட்டு, இணங்கி நடக்கும் ஆடவரை வங்சித்து, முத்தமிடுகின்ற வாயால் இசைதலைப்பேசி, அணுகுகின்ற துஷ்ட மாதர்களின் படுக்கையில் ஆசைவைத்து, என்உடலும் உயிரும் களைத்துப் போய் தினந்தோறும் மானபங்கத்தை அடியேன் அடையலாமோ?