பக்கம் எண் :


262 திருப்புகழ் விரிவுரை

 

மாதவர் கணத்தின் மேவென:-

அடியார் குழாத்தில் சேர்க என அருள்புரிய வேண்டுகின்றார். அடியாருறவு நம்மைப் பரகதியில் சேர்க்கும். பசு மந்தையில் சேர்ந்த கண்ணில்லாத பசு ஊர் சேரும். அதுபோல் ஞானி விழியில்லாத மனிதனும் அடியவர் உடன் கூடில் முத்தியுலகு புகுவான்.

வேல் மயில் கொடுத்து:-

அருணகிரியார் இத்திருப்புகழில் தமது உடம்பின்மீது வேலின் அடையாளத்தையும் மயிலின் அடையாளத்தையும் பொறித்தருளுமாறு முருகவேளை வேண்டுகின்றார்.

அப்பர் பெருமான் திருத்தூங்கானை மாடத்தில் இடபக்குறி, சூலக்குறி பெற்றார்.

பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும்
என்னாவி காப்பதற் கிச்சையுண்டேல் இருங் கூற்றகல
மின்னாரு மூவிலைச்சூல மென்மேற்பொறி மேவு கொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே
                                                                 - அப்பர்.

இதேபோல் அருணகிரியார் எட்டிக்குடித் திருப்புகழில் வேண்டுகின்றார்.

“தற்பொறி வைத்தருள் பாராய் தாராய்” - (மைக்குழல்) திருப்புகழ்.

இந்த விண்ணப்பத்தின் படி முருகப் பெருமான் திருத்துருத்தி என்னும் தலத்தில் வேல் மயிற் பொறி பதித்து அருள் புரிந்தனர்.

“அடைக்கலப்பொரு ளாமென நாயெனை
   அழைத்து முத்திய தாமநு பூதியே
   னருட்டிருப்புக ழோதுக வேல்மயி      லருள்வோனே”
                                      - (மலைக்கனத்) திருப்புகழ்.

வேதமும் ஒருத்தனா மென சிந்தை கூர்வாய்:-

“வேதம் இவன் ஒப்பற்ற ஒருவன் என்று அடியேனைக் கூறுமாறு முருகா! நீ திருவுள்ளத்தில் கருணை கூர்ந்தருள்” என்று வேண்டுகின்றார்.

“உனைப்புகழும் எனைப்புவியில்
   ஒருத்தனாம் வகைதிரு அருளாலே”- (கருப்புவில்) திருப்புகழ்.

“இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து
   ஒருநீ ஆகித் தோன்ற வியுமிய
   பெறலரும்பரிசில் நல்கும்”        - திருமுருகாற்றுப்படை

கருத்துரை

பொதிய மலையில் மேவும் குமாரக் கடவுளே! வேல் மயில் பொறித்து அடியேனை ஆட்கொண்டருள்வீர்.