பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 263

 

வள்ளியூர்

183

அல்லில் நேருமி   னதுதானும்
அல்ல தாகிய    உடல்மாயை
கல்லி னேர அ   வழிதோறுங்
கையு நானுமு  லையலாமோ
சொல்லி நேர்படு   முதுசூரர்
தொய்ய வூர்கெட   விடும்வேலா
வல்லி மாரிரு   புறமாக
வள்ளி யூருறை    பெருமாளே.

பதவுரை

சொல்லிநேர்படு-தமது வீரத்திறனைச் சொல்லிக் கொண்டு எதிர்த்த, முதுசூரர்- பழைய சூரர்கள், தொய்ய-அயர்ச்சி யடையவும், ஊர்கெட-அவர்களின் ஊர் பாழ்படவும், விடும் வேலா-விடுத்த வேலாயுதரே! வல்லிமார் இருபுறம் ஆக- கொடியனைய இருதேவிகளும் இருபுறத்தில் விளங்க, வள்ளியூர் உறை-வள்ளியூரில் வாழும், பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! அல்லில் நேரும்-இரவில் காணப்படும், மின் அது தானும்-மின்னல் அது தானும், அல்லது ஆகிய உடல் மாயை-அன்று என்று கூறத்தக்க உடல் ஒரு மாயை; கல்லின் நேர அ வழிதோறும், கல் நிறைந்த அந்த வாழ்க்கை வழியிலே-கையும் நானும் உலையலாமோ என் ஒழுக்க நிலையும் அடியேனும் நிலைகுலையலாமோ?

பொழிப்புரை

தங்கள் வீரத்திறத்தைச் சொல்லிக் கொண்டு எதிர்த்து வந்த பழைய சூரர்கள் சோர்வு அடையவும், அவர்களின் ஊர் பாழ்படவும் செலுத்திய வேலாயுதரே! வனவல்லி கஜவல்லி என்ற இரு தேவிமார்களும் இரு பக்கத்தில் விளங்க, வள்ளியூரில் வாழும் பெருமிதமுடையவரே! இரவில் தோன்றும் மின்னலைக் காட்டிலும் நிலையில்லாததான இந்த உடம்பு ஒருமாயை; கல் நிறைந்த வழிக்கு ஒப்பான இந்த வாழ்க்கை வழியிலே, என் ஒழுக்க நிலையும் அடியேனும் நிலைகுலைந்து அழியலாமோ?

விரிவுரை

அல்லினேருமினது தோனும் அல்லதாகிய உடல்:-

இரவிலே தோன்றுகின்ற மின்னலாவது சிலவிநாடிகள் நிற்கும்.