ரகசியம் போல் பாவனையாகத் தான் வழிபாடு. அதனால் “வானமூர்த்தி”யாக விளங்குகின்றனர். அருவரைகள்.....................................அமர்பொருதவீர:- இலக்கத் தொன்பான் வீரர்களையும் தாரகற்குத் துணை செய்வான் மயக்கிய கிரௌஞ்வரையையும், நக்கீரர் கற்கிமுகி என்ற பூதத்தால் அடைபட்ட வரையையும் பெருமான் திருவேலால் துகள்படச் செய்தனர். தேவர்கட்குப் பல் யுகங்களாக இடுக்கண் புரிந்த வந்த சூராதி யவுணர்களையும் அழித்தனர். அடியார்க்குச் சத்துருபயம் வராது. அதனால்”வீரமூர்த்தி”யாக விளங்குகின்றனர். அரவுபிறை வாரி......................................அமலர் குருநாதா:- “தவமே பயனைத்தரும்; பயனைத்தருவதற்கு பதி வேண்டுவதில்லை” என்ற கொள்கையை யுடைய தழருக வனத்து இருடிகள், சிவபெருமானை எதிர்த்து அபிசார வேள்வி செய்து, கொடும்பாம்புகளை உண்டாக்கி இறைவனைக் கொல்ல ஏவினர். கருணைக் கடலாகிய கண்ணுதற் கடவுள் அவ்விடப்பாம்புகளிடத்தும் இன்னருள் புரிந்து அவற்றைக் கொல்லாது ஆபரணமாகத் தரித்துக் கொண்டனர். “வீம்புடைய வன்முனிவர் வேள்விசெய்து விட்டகொடும் பாம்பனைத்துந் தோளிற் பரித்தனையே” - இராமலிங்கஅடிகள். சந்திரன் தக்கன் சாபத்தால் கலைகள் தேய்ப்பெற்று அஞ்சி எங்கும் புகலிடம் காணாது அரனாரிடம் அபயம் புக, அவனை அஞ்சேலென்று சிரமேற் சூடி யருள் புரிந்தனர். உலகங்களை எல்லாம் அழிப்பேனென்று வந்த கங்கையைச் சடையிலடக்கி உயிர்கட்குத் தண்ணருள் புரிந்தனர். இங்ஙனம் அரவு, பிறை, கங்கை இவற்றை முடித்துக்கொண்ட முழுமுதலாம் சிவபெருமான் சித்தங்குளிர மெய்ஞ்ஞானப் பொருளை உபதேசித்தனர். அதனால் “ஞானமூர்த்தி”யாக விளங்குகின்றனர். இருவினையிலாத............................................................இமையவர்குலேச:- இருவினை; நல்வினை, தீவினை, இரண்டுங் கெட்டாலன்றி இன்பந் தோன்றாது. நல்வினை புரியினும் உயர்ந்த பிறவியெடுத்து பயனை யநுபவித்தே தீரவேண்டும். அது பொன் விலங்கு போன்றது. தீவினை இரும்பு விலங்கு போன்றது. தீவினையைச் செய்யாது விடுத்தும் நல்வினையை சிவார்ப்பணமாக பலா பேக்ஷையின்றி செய்தும் இருவினை யொப்பு என்ற நிலையை யடைதல் வேண்டும். |