பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 271

 

பொழிப்புரை

பெரிய வடவைத்தீயை யுடைய கடல்மீதும், மாமரமாய் நின்ற சூரபன்மன்மீதும், விளங்குகின்ற, வேலாயுதத்தை விடுத்த தொழிலை விடாத வலிய வீரமூர்த்தியே! பருவதராஜ குமாரிக்கும், கங்கா நதிக்கும் குமாரரே! சாரல் மிகுந்த மலையில் இருந்த தலைவியும், கானக வேடர்களின் குமாரியுமான வள்ளி நாயகியைப் பக்கத்தில் கொண்டவரே! பேரொலியுடைய சமுத்திரம் போல் அலை மோதி வருகின்ற, மாணிக்ககங்கை சூழ்ந்துள்ள, கதிர்காம மாகிய பழைய திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள இளம் பூரணரே! பொன்னுலகத்தில் வாழும் தேவயானையம்மைக்கு வாழ்வான கருணை மேருவே! தேவர்கள் போற்றும் பெருமிதமுடையவரே! விளக்குமாறு, மாறுதல் இல்லாத மூதேவி, பூதம் பேய் முறையில்லாத நாய், கோணங்கி, தருமஞ் செய்யாமல் அழிவைக் கொள்ளுபவன், வெட்கமில்லாமல் புனுகு வாசனைப் பூசி வாழ்கின்ற பொது மாதர்களின் அன்பில்லாத தோள்களைச் சேரவேண்டி காம மயக்கங்கொண்டு, அதற்காகப் பொருள் தேட வேண்டி, பல கலைகளுக்கும் இருப்பிடமானவனே! கருணையில் மேருமலை போன்றவனே! புய மலையையுடையவரே! பருவமழை பொழியும் மேகம் போன்றவனே! என்று கூறினாலும் ஒரு சிறிதும் இரக்கங் கொள்ளாத மகா பாதகர்களைப் புகழ்ந்து பாடி ஓய்வில்லாமல் பரிசுப் பொருள்களைத் தேடி அலைபவன் ஆகிய அடியேன் இறந்துபோகா வண்ணம் திருக்கண்ணோக்கி யருளுவீராக.

விரிவுரை

அலகின்மாறு:-

விளக்குமாறு போல் கீழானவன். விளக்குமாறு ஒரு மூலையில் ஒதுங்கிக் கிடக்கின்ற பொருள். அதுபோல் ஆன்றோர்களால் ஒதுக்கப் பெற்றவன்.

மாறாதகலதி:-

கலதி-மூதேவி. எப்போதும் ஒன்றுபோல் மாறுதல் இல்லாமல் இருக்கின்ற மூதேவி. (தூங்குமூஞ்சி)

பூதவேதாளி:-

பூதம் போன்றவன். பேய் போன்றவன். உடம்பினால் பருத்தது பூதம். நிலைபேறு இன்றி அலைவது பேய்.

அடைவில் ஞாளி:-

ஞாளி-நாய். நல்லோர் பொல்லோர் தெரியாமல் குரைக்கும் நாய் போன்றவன்.