“சீறிஞாளிபோல் ஏறிவீழ்வதாய்” - (அறுகுநுனி) திருப்புகழ் அறமீயா அழிவுகோளி:- கோளி-கொள்ளுபவன். தருமஞ் செய்யாது அழிவுத் தன்மையைக் கொள்ளுபவன். மருளாகி:- மருள்-மயக்கம். பொது மாதர்களைத் தழுவ வேண்டும் என்ற மயக்கம் பூண்டு. தனவந்தரிடம் போய் அவர்களைப் புகழ்ந்துபாடிப் பலர் அழிகின்றார்கள். பலகலாகாரா:- ஒரு கலையுந் தெரியாத முழுமூடனைப் பார்த்துப் பல கலைகட்கும் உறைவிடமானவேன என்று பாடுவார்கள். மேரு:- கருணையே யில்லாத உலோபியை “நீ கருணையில் மேருபோன்றவன்” என்று புகழ்ந்து பாடுவார்கள். கராசலா:- மெலிந்த தோள்களையுடையவனைப் பார்த்து “மலை போன்ற புயத்தையுடையவரே! என்று பாடுவார்கள். கல்லாத ஒருவனையான்கற்றா யென்றேன் காடெறியும் அவனைநா டாள்வாய் என்றேன் பொல்லாத வொருவனைநான் நல்லாய் என்றேன் போர்முகத்தை அறியானைப் புலியே என்றேன் மல்லாரும்புயம்என்றேன் சூம்பல்தோளை வழங்காத கையனையான் வள்ளல் என்றேன் இல்லாது சொன்னேனுக் கில்லை யென்றோன் யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே. - இராமச்சந்திரகவிராயர். யாதும் பரிவுறாத மாபாதர்:- தமிழ்ப் புலவர்கள் எத்தனை எத்தனை விதமாக விசித்திரம் விசித்திரமாகக் கவிபாடினாலும், ஒரு சிறிதும் இரக்கம் காட்டாமல், போ என்று சீறி விழுந்து, கடிக்கின்ற மாதிரிபேசி அடிக்க வருவார்கள். அதனால் உலோபியரை மாபாதர் என்றார். பரிசில் தேடி மயாயாதபடி பாராய்:- “முருகா! வாழ்நாள் முழுவதும், பொருளாளரைத் தேடிச் சென்று, அவர்களிடம் பரிசுப் பொருள்களை நாடி உழன்று மாண்டு போகாத வண்ணம் தேவரீர் அருட் கண்பார்வையால் பார்த்தருள வேண்டும்” என்று முறையிடுகின்றார். |