பக்கம் எண் :


276 திருப்புகழ் விரிவுரை

 

விரிவுரை

இந்த திருப்புகழ் இல்லறத்தில் வாழ்பவனுக்கு என்ன என்ன தேவையோ அவையாவும் குறிக்கப்படுகின்றன.

உடுக்கத்துகில் வேணும்:-

மனித வாழ்க்கைக்கு முதல் தேவை உடை. உணவுயின்றி இருக்கலாம். உடையின்றி ஒரு கணமும் இருக்க முடியாது. “சிறப்புடையப் பொருளை முந்துறக் கிளத்தல்” என்று சூத்திரப் படி உடையை முதலில் மொழிகின்றார்.

நீள்பசி அவிக்கக் கனபானம் வேணும்:-

பானம்-பருகும் நீர். கனபானம்-பானகம், பால், மோர் முதலிய குடிநீர் வகை. இது சிறிது கெட்டியாக வேணும் என்று கேட்கின்றார்.

நீள்பசியை-பெரிய பசியை அவிப்பதற்குச் சிறந்த சுவைநீர் வகைகள் வேண்டும்.

நல்லொளிக்குப் புனலாடை வேணும்:-

உடம்பு நல்ல துகில் ஒளியாக விளங்கும் பொருட்டு குளிக்க நீரும் நல்ல ஆடையும் வேண்டும்.

ஏற்கனவே துகில் என்று வந்துவிட்டபடியால், “புனலாட வேண்டும்” என்றிருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது.

மெய்யுறு நோயை ஒழிக்கப் பரிகாரம் வேணும்:-

உடம்புக்குற்ற நோய்களை விலக்க மருந்துகள் வேண்டும். மருத்துவம் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. இது நான்கு உபவேதங்களுள் ஒன்று. ஆயுள் வேதம் எனப்படும்.

உள்இருக்க சிறுநாரிவேணும்:-

வீட்டுக்குள் இருக்கும் பொருட்டு இளமையான மனைவி வேண்டும் என்கின்றார். சிறிது வயது முதிர்ந்த மனைவியினால் இன்பம் விளையாது என்ற குறிப்பையும் காண்க.

படுக்கத்தனி வீடுவேணும்:-

இளம் மனைவியிருந்தால் மட்டும் போதாது; அவளுந்தானும் வாழச் சிறு வீடுவேண்டும் என்கின்றார். துணி, உணவு, நீர், மருந்து, மனைவி, வீடு என்ற ஆறு பொருள்கள் வேண்டும் என்கின்றார்.

இவ்வகையாவும் கிடைத்து க்ருஹ வாசியாகிய மயக்கக் கடலாடி:-

மேலே கூறிய அனைத்துங் கிடைத்து இல்லற வாசியான பின், அவ்வாழ்வில், மயங்கி, மயக்கமாகிய கடலில் முழுகித் துன்புறுகின்றேன்.