பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 277

 

நீடியகிளைக்கு பரிபாலனாயுயிர் அவமே போம்:-

மாமன், மைத்துனன், சகலன், மருகன் என்று பலவாறாகப் பெருகிக்கிளைத்த சுற்றத்தார்களுக்குத் தான் காப்பவனாக இருந்து, வாழ்ந்து, பிறகு அவமே செத்து மடிகின்றார்கள் பலர்.

க்ருபைச் சித்தமும் ஞான போதமும்:-

முருகனுடைய கருணையுள்ளமும் சிவஞான போதமும் வேண்டும் என்கிறார்.

அழைத்துத்தர வேணும்:-

முருகா! நீ என்னை அழைத்துக் கருணையுடன் மேலே கூறிய இரண்டையுந்தந்தருள வேண்டும்.

குடக்குச் சில தூதர் தேடுக:-

இராமாயணத்தில் நாடவிட்ட படலத்தை இந்த அடி குறிக்கின்றது.

சுக்ரீவன், சீதையைத்தேடும் பொருட்டு, மேற்கே சுஷேணனையும், வடக்கே சதவரியையும், கிழக்கே வினதனையும், தெற்கே, அநுமான், ஜாம்பவான், நீலன், அங்கதன் முதலியோரையும் ஒரு மாதத்துக்குள் திரும்பவேணும் என்று தவணை வைத்து அனுப்பினான்.

குறிப்பிற் குறிகாணு மாருதி:-

“குறிப்பிற் குறிப்புணர்வாரை உறுப்பினுள்
   யாது கொடுத்துங் கொளல்”

என்ற திருவள்ளுவர் வாக்குக்கு இலக்கானவர் அநுமான். இவரிடம் சீதாதேவியின் அடையாளங்களைக்கூறி, கணையாழியையும் ஸ்ரீராமர் கொடுத்து அனுப்பினார்.

அனுமார் தென்கடல் வரைதேடி, சம்பாதி கூறிய வார்த்தைகளால், கடல்கடந்து, இலங்கை சென்று, அசோகவனத்தில் தேவியைக் கண்டு, ஸ்ரீராமர் கூறிய அடையாளங்களைக் கூறி கணையாழியைத் தந்தார்.

பின்னர் அசோகவனத்தை யழித்து, இராவணனைக்கண்டு அறிவுரைக் கூறி, இலங்கையை எரியூாட்டித் திரும்பும்போது இலங்கையின் தென்திசையிலுள்ள கதிர்காமம் போய், மாணிக்க கங்கையில் முழுகி கதிர்காம வேலவரை வழிபட்டு அவருடைய அருள் பெற்றார்.

இதனை அருணகிரிநாதர் இங்கே குறிப்பிடுகின்றார்.

“அருட்பொற்றிரு வாழி மோதிரம்
        அளித்துற்றவர் மேல் மனோகரம்
        அளித்துக் கதிர்காம மேவிணு       பெருமாளே”