உள்ளமாகிய கடலில் கொண்டு உறவு செய்து எனக்குள் அது சிறக்குமாறு திருவருள் செய்வீர். விரிவுரை எதிரிலாத பக்தி:- இறைவனை பக்தி நெறியாலேயே காணமுடியும். பக்தி என்பதும் அன்பு என்பதும் ஒன்றே. பக்தி நெறியை யன்றி வேறு நெறிகள் கடினம். தவம் யோகம் விரதம் இவை பக்தியைப் போல் சுலபமான நெறிகள் அல்ல. “கருமமா தவுஞ்செபஞ்சொல் காசறு சமாதி ஞானம் புரிபவர் வசமதாகிப் பொருந்திடோம் புரிவொன்றின்றி திரிவறும் அன்புசெய்வார் வசமதாய்ச் சேர்ந்து நிற்போம் உரைசெய்வோம் அவர்முன் எய்தி அவருளத் துறைவோம்என்றும்” என்று வாயு சங்கிதையில் சிவபெருமானே கூறுகின்றார். “பக்தி வலையில் படுவேன் காண்க” “பக்திநெறி யறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட அத்தன்” - மணிவாசகர் “அன்பெனும்பிடியுள் அகப்படும் மலையே” - திருவருட்பா கடவுள் அன்பின் விளைகின்ற அமுதம் என்று அறிக. மலரில் உள்ள மனத்தைக் கரத்தினால் தொட்டும், கண்ணினால் கண்டும், காதால் கேட்டும், நாவினால் சுவைத்தும் அறிய முடியாதல்லவா? நாசியினால் மோந்து அறிய முடியும். அதுபோல் இறைவனை அன்பு என்ற ஒன்றாலேயே அறிய முடியும். “கடவுளை நான் காணமுடியுமா?” என்று ஒருவர் ஒரு பெரியவரிடம் கேட்டார். அப்பெரியவர் “காணமுடியும்” என்றார். அவர் “எவ்வாறு காணமுடியும்” என்றார். ‘தாய்க்கு தன் அருமைக் குழந்தைமேல் உள்ள அன்பு‘ ‘லோபிக்குப் பணத்தின் மீதுள்ள ஆசை‘ ‘கற்புடைய மங்கை கணவன் மீது வைத்த காதல்‘ இந்த மூன்றும் ஒன்றுபட்டு நின்ற அன்பு உனக்குக் கடவுள் மீது இருக்குமானால் ஒரு கணத்தில் அவரைக் காணலாம்” என்று பெரியவர் பதிலளித்தார். அதுதான் “எதிரிலாத பக்தி” யாகும். கண்ணப்பர் காளத்தியப்பர் மீது வைத்த அன்புக்குச் சமானமில்லை. “கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்” என்கிறார் மாணிக்கவாசகர். |