பக்தியே முத்தியைத்தரும் என்கிறார் அருணகிரிநாதர் வேலைக்காரன் வகுப்பில். “ஆனபயபக்தி வழிபாடு பெறுமுத்தி” இனியதாள் நினைப்பை:- இறைவனுடைய இணையடிமலர் கரும்பினும் கற்கண்டினும், கனியினும், இனிமையானது. கனியினுங் கட்டிபட்ட கரும்பினும் பனிமலர்க்குழற் பாவை நல்லாரினுந் தனிமுடி கவித்தாளு மரசினும் இனியன் தன்னடைந் தார்க்கிடை மருதனே. - அப்பர் மாசில்வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இயைணடி நீழலே. - அப்பர் பிறவி வெப்பத்தை மாற்றும் குளிர்ந்த நிழல் பெருமானுடைய திருவடி நிழல். அது சித்தத்தில் தித்திக்கும் தீஞ்சுவையுடையது. இருபோதும்:- இருபோது என்பதற்கு காலையும், மாலையும் என்று பொருள் செய்யக்கூடாது. காலை மாலையன்றி மற்ற நேரங்களிலும் இறைவனை மறத்தல் கூடாது. ஆகவே இரவும் பகலும் என்று கூறுதலே சிறப்பு. “இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்” - அப்பர் இதய வாரிக்குள் உறவாகி:- வாரிதி-கடல். உள்ளத்தைக் கடல் என்று உருவகித்தனர். கடல் ஆழமுடையது. அதுபோல் உள்ளமும் ஆழமுடையது. இதயமாகிய கடலுள் இறைவன் திருவடியாகிய மந்திரகிரி சேர்வதாய் திருவருளமுதம் தோன்றும். எனதுளே சிறக்க அருள்வாயே:- திருவடித்தியானம் உள்ளத்தில் சிறப்பாக இருத்தல் வேண்டும். “நினைப்பவர் மனம் கோயிலாகக் கொண்டவன்” ஆதலின் நன்று நினைத்து இறைவனை உள்ளக் கோயிலில் எழுந்தருளப் புரிவார் உய்வு பெறுவார். கதிர்காம வெற்பில் உறைவோனே:- கதிர்காமம் என்பது மிகவும் புனிதமான திருத்தலம். இது ஈழ நாட்டில் இருப்பது. மாணிக்க கங்கை அருகில் ஓடுகின்றது. |