பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 289

 

மாதர்களுடைய, ஒளிர் அமளி பீடத்தில்-விளங்குகின்ற படுக்கையிடத்தில், அமடுபடுவேனுக்கு-சிக்கிக்கொண்ட அடியேனுக்கும், உனது அருள் க்ருபா சித்தம்- உமது திருவருள் கருணையுள்ளத்தை, அருள் கூர வேணுமே-தந்தருள வேண்டும்.

பொழிப்புரை

இமயமலையின் புதல்வியும், இன்பங்களை நுகரச் செய்கின்றவளும், பேராற்றலுடையவளும், எழுதவொண்ணாத காயத்ரி மந்திர சொரூபிணியும் ஆகிய உமாதேவியின் திருக்குமாரரே! வேடர் குலப்பாவைக்கு மடல் எழுதி விரும்பி, பரண் அருகில் சென்று சேவித்து நின்ற முருகக் கடவுளே! விசாக மூர்த்தியே! தேவர்களின் சிறையை விடுவிக்கும் பொருட்டு, போர் புரிந்து கீர்த்திபெற்ற மிகுந்த மேன்மையும் ஆற்றலும் படைத்த கவிராஜராஜனே! அழுது உலகங்களை யெல்லாம் வாழ வைத்த கவுணிய குல சூரியனே! அரிய கதிர்காமத்திற்கு உரிய அழகரே! போர் முகத்துக்குரிய வேல் போன்ற கண்களைப் புரட்டியும், இரவிக்கை யணிந்த தனங்களை அசையவும், தெருவில் மயில் போல் உலாவி, சரியை, கிரியை, யோகம் என்னும் வழிகளில் நின்று, அருளும், தூய்மையயும், வாய்ந்த பெரியோர்களும் தமைக்கண்டு மோகிக்கும்படிச் செய்து, உமது திருவடியை நினையாதவர்க்கும், மரணத்தோடு கூடிய மாயைக்கும் உரியவராய், சிறந்த கிளியைப் போன்றவரும், மாயைகளில் வல்லவரும் ஆகிய பொது மாதர்களுடைய, ஒளி செய்கின்ற, பஞ்சணையில் சிக்கிக் கொண்ட அடியேனுக்கும் உமது அருட் கருணை திருவுள்ளத்தை அருள் கூர்ந்து அளிக்கவேண்டும்.

விரிவுரை

சரியை க்ரியை யோகத்தின் வழிவருக்ருபா சுத்தர் தமையுணர ராகத்தின் வசமாக :- மேவியே

சரியா மார்க்கம், கிரியா மார்க்கம், யோக மார்க்கம் என்ற வழிகளில் நின்று கருணையும் தூய்மையும் உடைய பெரியோர்களும் தம்மைக் கண்ட மாத்திரத்தில் தம் வசமாகி மோகித்து உழலுமாறு ஈர்க்கும் ஆற்றல் படைத்தவர்கள் பொதுமாதர்கள்.

உமதடி யுனாருக்கு மனுமரண மாயைக்கு முரியவர்:-

முருகனுடைய திருவடியை நினைக்காத பாவிகளுக்கும் தொடர்ந்து வருகின்ற மரணத்துடன் கூடிய மாயைக்கும் அவர்கள் உரியவர்கள்.