பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 29

 

உடையவனாய், பராமுகது ரோகரை-அலட்சியம் புரியும் பாவிகளை, தராசைஉற்று அடைவேனோ-மண்ணாசை கொண்டு சேர்வேனோ?

பொழிப்புரை

இரகுவின் மரபில்வந்த இராமர் முன்பு, அழுதவனாகிய இராவின் நிறமுடைய இராவணன் என்ற அரசன் அச்சப்பட்டு மாயும்படி வென்ற அன்புடைய திருமாலின் கண்ணையே மலராகக் கொண்டு ஆண்டருளிய, உண்மையான பழை புகழுடைய சிவபெருமானுடைய திருக்குமாரரே! கலைகளின் தலைவரே! புகழ் பெற்ற விநாயகமூர்த்திக்கு இளையவரே! ஆசையில்லாதவரே! தேவர்கட்குத் தலைவரே! போர்புரியாமல், தவறுதல் இல்லாமல் வெல்லவல்ல வீரவழியில் விருப்பம் உள்ளவரே! திருப்போரூரரே!கலந்து விளங்கும் குரா, அகில் முதலிய மரங்கள் பருத்து அடியுடன் வளர்ந்து முதிர்ந்துள்ள விராலிமலையில் வீற்றிருக்கும் அரசரே! பெருமிதமுடையவரே! நோயில்லாததும், பழமையானதும், எல்லாவற்றுக்கும், மேலானதும், வரத்தைத் தருவதும், அழிவற்றதும், கவலையில்லாததும், சிறந்த முதன்மையானதும், ஒளிமயமாக விளங்கி ஆசையற்றதும், சிவமயமான முனிவர்கள் புகழ்வதும், ஆயுதம் இன்றிப் புரங்களை எரித்தசிவன், திருமால் பிரமன், விண்ணுலகம், மண்ணுலகம், அசையும் உயிர்கள், அசையாத வுயிர்கள் ஆகிய அனைத்திலும் கலந்து விளங்குவதுமாகிய ஆதி்பொருளை அடியேன் தியானிக்காமல், பயனில்லாத புகழைக்கொண்டு பிறருக்கு அடிமைப்பட்டு முதலையின் கொடிய உள்ளத்தையுடையவராய் வேறுமுகமாய்த் திரியும் பாவிகளுடன் மண்ணாசையினால் சேர்வேனோ?(சேரமாட்டேன்)

விரிவுரை

இந்தத் திருப்புகழில்சுவாமிகள் எப்பொருட்கும் மூலமாகிய இறையைத் தியானிக்க வேண்டும் என்று உபதேசிக்கின்றார். இப்பாடல் பூராவும் தனாதன தனாதன என்ற சந்தத்தால் ஆனது. இதே சந்தத்தில் திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளும், “நிராமயபராபர புராதன” என்று ஒரு தேவாரம் அருளிச் செய்திருக்கிறார்.

நிராமயம்:-

ஆமயம் - நோய்.நோயில்லாதது நிராமயம்.

புராதன:-

புராதனம்-பழமையானது.இறைவன் முன்னைப்பழம் பொருட்கு முன்னைப்பழம் பொருளாக விளங்குபவன்.