பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 295

 

-குற்றமில்லாததும் ஆகிய, சாயுச்சியகதியை-சாயுச்சிய முத்தியை, ஈறு அற்ற- முடியில்லாத, சொல் சுகசொரூபத்தை உற்று-புகழப்படுகின்ற இன்ப நிலையை பொருந்தி, அடைவேனோ-அடைய மாட்டேனோ?

பொழிப்புரை

திருமதில் சூழ்ந்த வயலூர் என்னுந் திவ்ய க்ஷேத்திரத்திற்கு உரியவராகிய சாமர்த்திய முடையவரே! சிறந்த ஆண்டவரே! மிக்க வீரமுடைய சூரபன்மன் வீழ்ந்து புரளுமாறு வேலாயுதத்தை விடுத்தருளிய திருக்கரத்தையுடைய குமாரக் கடவுளே! மேன்மையுடைய திருப்புகழைப் பாடுதற்கு அடியேனுக்கு அருள்புரிந்தவரே! கருங்குரங்குக் கூட்டம் பலாமரத்தின்மீது ஏறி பலாப்பழங்களைப் பீறிப்புசித்து ஒன்றுடன் ஒன்று போராடிவாழை மா முதலிய மரங்களில் உலாவுகின்ற ஈழ நாட்டில் விளங்குங் கதிர்காமம் என்னுந் திருமலையில் வாழுகின்ற பெருமிதமுடையவரே! சரியாமார்க்கத்தில் நின்றவர்க்கும், கிரியாமார்க்கத்தில் நின்றவர்க்கும், நலம் பொருந்திய எல்லா வகைப்பட்ட யோகமார்த்தில் நின்றவர்க்கும் எட்ட அரிதானதும், ஒன்றோடொன்று பிணங்கும் சமயங்களுக்கு நெருங்க முடியாதததும், உண்மைப் பொருளாகிய சத்தியில் அடங்கி, மேலான துரித நிலைகடந்த மேல் நிலையில், அற்புதமான பெரிய ஞானமயமாகிய ஒப்பற்ற ஒளி நிறைந்த நன்மை மிக்க இடமும், நித்தியமானதும், குற்றமில்லாததுமாகிய சாயுச்சிய முத்தியை, முடிவில்லாத புகழுடைய இன்பவடிவத்தைப் பொருந்தி அடியேன் அடையமாட்டேனோ?

விரிவுரை

சரியை:-

ஆலயத்தை அலகிடுதல், மெழுகல், பூமாலை தொடுத்துக் கொடுத்தல், விளக்கிடுதல் முதலிய திருத் தொண்டுகள் செய்தல்,

நற்த னப்பணியிற்றுநர் நறுமலர் பறித்துப்
பந்த முற்றிடத் தொடுத்தணிபவர்தளிப் பரவ
முந்த நெய்விளக் கிடுபவர் பிறபணி முடிப்போர்
எந்த வானருங்கீழ்ப்பட மேற்படு மியல்பார்.
                                      - திருப்பெருந்துறைப் புராணம்

இதனை, “புறத்தொழிலால் உருவத் திருமேனியை வழிபடுதல்” என்று சுருங்கச் சொல்லலாம்.