கிரியை:- இறைவனை உள்ளம் உருகிப் பாடுதல். மந்திரத்தைச் செபித்தல்., திருவுருவத்தைப் பூசித்தல் முதலியன. வாழ்த்த வாயு நினைக்க மடநெஞ்சம் தாழ்த்தச்சென்னியுந் தந்த தலைவனைச் சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே வீழ்த்த வாவினை யேனெடுங் காலமே. - அப்பர் இதனை, “அகத்தொழில் புறத்தொழில் இரண்டாலும் உருவாருவத் திருமேனியை வழிபடுதல்” என்று சுருங்கச் சொல்லலாம். சகலயோகர்:- மந்திரயோகம், ஆதாரயோகம், நிராதாரயோகம், கர்மயோகம், பக்தியோகம், ஹடயோகம், ராஜயோகம், சிவயோகம் முதலிய அருவத் திருமேனியை அகத்தொழிலால் மட்டும் வழிபடுதல். மறவாமை யானமைத்த மனக்கோயி லுள்ளிருத்தி உறவாதி தனையுணருமொளிவிளக்குச் சுடரேற்றி இறவாத வானந்த மெனுந்திருமஞ் சனமாட்டி அறவாணர்க் கன்பென்னு மமுதமைத்தார்ச் சனைசெய்வார். - பெரியபுராணம் ஆக இந்தச்சரியை கிரியை யோகங்களாலேயே ஆனந்தாநூபவ முத்தியுண்டாக மாட்டாது. ஞானத்தாலேயே உண்டாகும். சரியை முதலியன, ஞானத்தைப் பெறுவதற்குச் சாதனங்கள். ஞானம் அறிவு மாத்திரத்தால் உரு, அருவுரு, அரு ஆகிய மூன்றையுங் கடந்த அகண்டகார ஜோதிமயமான திருமேனியை வழிபடுதல். ஞானத்தின் மிக்க வறநெறி நாட்டில்லை ஞானத்தின்ல மிக்க சமயமு நன்றல்ல ஞானத்தின் மிக்கவை நன்முத்தில் நல்காவா ஞானத்தின் மிக்கார் நாரின்மிக் காரே - திருமந்திரம் அரியவிம் மானிட யாக்கை பெற்றவர் கருமயோ கங்களாற் காலந் தள்ளுவர் உரிய மெய்ஞ் ஞானயோ கத்தி னாலரன் துரிய ஞானத்தினைச் சோதி; யார்களே. - பதிபசுபாசவிளக்கம் “சரியை கிரியா யோகஞ் செலுத்தியபின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர்” - சித்தியார் ஞானத்தால் வீடென்றே நான்மறைகள் புராண நல்லவாகமஞ் சொல்ல அல்லவா மென்னும் ஈனத்தா ரென்கடவர் - சித்தியார் |