மனோமயகோச மென்ற குணசரீரத்தில் ஆன்மாவின் அறிவு விளங்கப் பெறுகின்ற அவசரம் சுழுத்தி எனப்படும். அப்போது கரவி பிராணன் புருடன் என்ற 3. வாயு 9 வசனாதி 5 தன்மாத்திரை கரணம் 3 ஆக 22 நீங்கியது. விஞ்ஞானமயகோச மென்கின்ற கஞ்சுக சரீரத்தில் ஆன்மாவின் அறிவு விளங்கப் பெறுகின்ற அவசரம் துரியம் எனப்படும். மேற்கூறிய மூன்றில் சித்தமும் நீங்க, பிராணனும் புருடனும்மாகிய கருவி2. ஆனந்தமயகோச மென்கின்ற காரண சரீரத்தில் ஆன்மாவின் அறிவு விளங்கப் பெறுகின்ற அவசரம் துரியாதீதம் எனப்படும். அப்போது பிராணனும் நீங்க புருடன் மட்டும் கருவி 1 இங்ஙனம் கருவின் ஒடுங்கி துரியாதீதத்தில் ஆன்மா சுத்த அஞ்ஞான மயமாய் நிற்கும் அவசரத்தினையே கீழாலவத்தை என்பர். இனி இறைவனுடைய அருட்சத்தியானது சுத்த சுயம் பிரகாசமாய் ஆன்மாவினையும், அவ்வான்மாயினைப் பொதிந்த ஆணவத்தினையும் வியாபித்துக் கொண்டு பேரொளிப் பிழம்பாய் நிற்கும். இந்த நிலையே மெய்ஞ்ஞான நிலை. சாயுச்சிய கதியை.......................அடைவேனோ?:- துரியாதீத நிலையை யடைந்து “எல்லாமற என்னையிழந்த நலம்” என்ற தன்மையையுற்று இன்பவடிவாகி பரகதியையடைய வேண்டும். மேன்மைத் திருப்புகழை யோதற்கெனக் கருள்வோனே:- திருப்புகழ் முருகவேள் திருவருள் மயமாக விளங்குவதால் மேன்மை என்ற அடை தரப்பட்டது. அதனைப் பாடுதற்கு அருணகிரியார்க்கு வயலூரில் முருகவேள் அருள் புரிந்தனர். “பாத பங்கய முற்றிட உட்கொண் டோதுகின்ற திருப்புகழ் நித்தம் பாடுமன்பது செய்ப்பதி யிற்றந் தவநீயே”- (கோலகுங்கும) திருப்புகழ் கருத்துரை வயலூரா! சூரனையடக்கிய வீரரே! கதிர்காமரே! துரியாதீத நிலையுற்று இன்புருவாகிய முத்திபெற அருள்புரிவீர். |