பொழிப்புரை சூரியமண்டலமும், விண்ணுலகும், மண்ணுலகும் புழுதிபடவும், அமரர்கள் அனைவரும் உய்வுபெற்று ஈடேறவும், எழுகடலும் அஞ்சி “முறையோ” என்று கதறித் துன்புறவும், உயர்ந்த மேருகிரி இடிந்து துகள் படவும், அசுரர்களின் கொடிய போர் ஒழியவும், மிகுந்த வேகத்தொடு கூடிய நீண்ட வேலாயுதத்தை விடுத்தருளியவரே; மரகத நிறமுடைய திருமாலும் பொன்னிறமுடைய திசைமுகனும் நெருப்பு நிறமுடைய உருத்திரரும் திருவடியை விரும்ப பச்சை மயில் வாகனத்தில் மீது எழுந்தருளுகின்ற இறைவரே! விநாயகமலை யென்னுந் திருத்தலத்தில் வாழ்கின்ற வேலவரே! மலைகளில் உலாவுகின்ற வேடர்களுக்கு ஆதாரமாகிய பெருமையின் மிக்கவரே சரவண தடாகத்தில் தோன்றியவரே! போற்றி போற்றி; கருணை மிகுந்து தத்துவங்கடந்த தனிமுதலே” போற்றி போற்றி; நூறு இதழ்களுடன் கூடிய தாமரை மலர்போன்ற திருவடியை உடையவரே! போற்றி போற்றி; மிக்க அழகுடையவரே! இளமையுடன் கூடிய தீரரே! போற்றி போற்றி; முதன்மை பெற்ற வீரரே! போற்றி போற்றி; போருக்குரிய தளங்கள் நிறைந்த திருப்போரூரில் வாழ்கின்றவரே! போற்றி போற்றி; உலகங்களுக்குத் தலைவரே! பரஞானவடிவினரே! போற்றி போற்றி; அமரேச னுக்கு அதிபரே! போற்றி போற்றி; பரிமள மிக்க கடப்பமலர் மாலையை யணிபவரே! போற்றி போற்றி; கருமை நிறமுடையவரும் ஆறு குணங்களை யுடையவருமாகிய உமா தேவியாருடைய திருப்புதல்வரே! போற்றி போற்றி; இருமை நலன்களையும் அருள வல்லவரே! போற்றி போற்றி; மிகுந்த ஆண்மை யுடையவரே! போற்றி போற்றி; அடியேனுக்கு அருள் புரிவீராக. விரிவுரை சரவணஜாதா :- ஆயிரத்தெட்டு அண்டங்களையும் நூற்றெட்டு யுகங்களாக அறநெறி வழுவி அமரரை வருத்தி அரசு புரிந்த சூரபன்மனுடைய கொடுமையாகிய தீயினால் வெதும்பிய தேவர்கள் “இனிய உய்வு கிடைக்குமோ?” என்று ஏங்கி சிவபெருமானிடம் போய் முறையிட்டனர். சூட்டை சூட்டினால் நீக்கும் மருத்துவ முறை போல் சூராதியவுணரின் கொடுமைத்தீயை யவிக்க |