பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 301

 

விரிவுரை

இத்திருப்புகழ் அருணகிரிநாதருடைய வரலாற்றுத் தொடர்புடையது. மூன்று அடிகளில் தன்னை மயக்கிய கணிகையரது அங்க நலன்களைக் கூறுகின்றார்.

காமுகனகப்பட்ட ஆசையை மறப்பித்த கால்களை மறக்கைக்கு வருமோதான்:-

“பொது மாதரது வசமாகிய ஆசைக்கடலில் முழுகியிருந்த அடியேன், அந்த ஆசையை அடியோடு மறக்குமாறு அருள்புரிந்த உமது பாதமலரை மறக்க வொண்ணுமோ! ஒருபோதும் மறவேன், மறவேன்” என்று சுவாமிகள் கூறுகின்றார்.

தேரிரவியுட்கிப்புகாமுதுபுரம்:-

இராவணனுடைய ஆணைக்கு அஞ்சி இலங்கையில் சூரியன் தேர் செல்ல மாட்டாது.

“பகலவன் மீதியங்காமை காத்த பதியோன்”    - சம்பந்தர்

“பகலவன் மீதியங்காத இலங்கை”   - பெரியதிருமொழி

"புணரியில் விரவி எழுந்த ஞாயிறு
விலகிய புரிசை இலங்கை வாழ்பதி”- (நிணமொடு) திருப்புகழ்

அத்யுக்ர யானைபடும் ரத்னத்ரி கோண சயிலம்:-

அதி உக்ர-அத்யுக்ர. கோண சயிலம்-திருகோணமலை.

இது இலங்கையில் உள்ள அருமையான தலம். தேவாரப் பாடல் பெற்றது.

“கனமணிவரன்றிக் குரைகடல் ஓதம்
   நித்திலம் கொழிக்கும் கோணமா மலை”       - சம்பந்தர்

வேரி மழையில்:-

வேரி-வாசனை. மழை-மேகம். இரு ஆகு பெயராகக் கூந்தலைக் குறிக்கின்றது.

வேல்களில்:-

வேல் போன்ற கண். இதுவும் ஆகு பெயர்.

கருத்துரை

கதிர்காமத்திருமுருகா! அடியேனுடைய ஆசையை யகற்றிய உன்பாத மலரை ஒருபோதும் மறவேன்.