பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 303

 

இருகணால்-இரண்டு கண்களில், முத்தம் உதிர-முத்துப் போன்ற கண்ணீர் சிவந்த, யாமத்தின் இரவினால்-யாமங்கள் கொண்ட இரவில், நித்தம் மெலியாதே, தினந்தோறும் மெலிவு அடையாமல், இடர் உறா-துன்பம் அடைந்து, மெத்த மயங்கௌா-மிகவும் மயக்கங் கொண்டு, நிற்கும் இவளை வாழ்விக்க-வருந்தி நிற்கும் இந்த நாயகியை வாழ்விக்கும் பொருட்டு, வரவேணும் தேவரீர் வந்தருளவேணும்.

பொழிப்புரை

யானைகள் வாழும் வள்ளிமலையில் அருமை வாய்ந்த வேட்டுவப் பெண்ணாகிய வள்ளியம்மையின் கலவியின்பம் மிகுந்த அழகிய மணிமார்பிணரே! பொன்னுடன் கூடிய மாணிக்க மணி போன்ற வடிவினரே! சிறந்த கதிர்காமத்தில் உறைகின்றவரே! முருகப் பெருமாளே! அடியார்களின் அருகில் உறைபவரே! முத்திக்கு முதல்வரே! பச்சை மயில் வீரரே! மிகுந்த வேகத்துடன் வந்த கொடிய சூரன்கெட்டு அழிய வேலைத் தொட்டருளிய பெருமிதமுடையவரே! வாசனை நீங்காததும் வெற்றி பெறுவதும் ஆன மலர்க்கணைகளைத் தொட்டுப் பயிலும் வில்லைக் கையில் வைத்து வலிமை செய்யும் மன்மதனாலும், மதில்களைத் தாண்டிவரும் கலைகள் குறையாத வட்டவடிவமான சந்திரன் சுட்டு நிற்பதனாலும், இருகண்களில் முத்துமுத்தாய் கண்ணீர் சிந்த யாமங்கள் தோறும் ஒவ்வொரு நாளும் இரவில் மெலியாதவாறு, காமமயக்கத்தால் துன்புற்று நிற்கும் இவளை வாழ்விக்க வந்தருளவேண்டும்.

விரிவுரை

இந்தத் திருப்புகழ் அகப்பொருள் துறையில் அமைந்தது.

தலைவியின் துன்பத்தைக் கண்டு இரங்கிய பாங்கி தலைவனாகிய முருகனிடம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

மருவறா வெற்றி................................மதனாலும்:-

வாசனையும் வெற்றியும் பொருந்திய மலர்க் கணைகளால் மன்மதன் இவனைச் சித்திரவதை செய்கின்றான். அதனால் இவளை முருகா! நீ வாழ்வித்தருள்.

மதிசுடா நிற்கு மதனாலும்:-

தலைவிக்கு விரகதாபத்தை மிகுதிப்படுத்திச் சந்திரன் சுடுகின்றனான்.

ஊரைச் சுடுமோ உலகத்தைத் தான்சுடுமோ?
ஆரைச் சுடுமோ? அறிகிலேன்-பாரில்
பொருப்பு வட்டமானமுலைப் பூவையை வாட்டும்
நெருப்பு வட்டமான நிலா