இருகணால் முத்த முதிர:- இத்தலைவி தலைவனை நினைந்து இருகண்களினின்றும் முத்து முத்தாய் கண்ணீர் சிந்தி வருந்துகின்றாள். யாமத்தின் இரவினால் நித்தம் மெலியாதே:- யாமம் 3 மணி நேரம். 71/2 நாழிகை. யாமந்தோறும் - இரவில் இவள் தினமும் வேதனைப்படுகின்றாள். ஆதலால் காதலால் மெலியும் இவளை வாழ்விக்க முருகா! நீ வந்தருள். கனகமாணிக்க வடிவனே:- அருணகிரியார் கதிர்காமம் சென்று தெரிசித்தபோது பொன்னில் பதித்த மாணிக்கம் போன்ற அழகிய திருவுருவுடன் முருகவேள் காட்சித் தந்தருளினார். கருத்துரை கதிர்காம வேலவனே! உன்னை நாடும் இத்தலைவியை வாழ்விக்க வந்தருள்வீர். மாதர்வச மாயுற் றுழல்வாரும் மாதவமெ ணாமற் றிரிவாரும் தீதகல வோதிப் பணியாரும் தீநரக மீதிற் றிகழ்வாரே நாதவொளி யேநற் குணசீலா நாரியிரு வோரைப் புணர்வேலா சோதி சிவஞானக் குமரேசா தோமில்கதிர் காமப் பெருமாளே பதவுரை நாத ஒளியே-ஒலி ஒளியாக விளங்குபவரே! நல்குண சீலா-நல்ல அருட் குண சீலரே! நாரி இருவோரை புணர்வேலா-வள்ளியம்மை தேவசேனை யென்ற இரு சக்திகளை மருவுகின்ற வேலாவுதரே! சோதி-ஜோதியே! சிவஞான குமர ஈசா-சிவஞானத்தைத் தரும் குமாரக் கடவுளே! தோம் இல் கதிர்காம- குற்றமில்லாத கதிர்காமத்தில்வாழும் பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! மாதர் வசம் ஆய் உற்று உழல்வாரும்-பெண்கள் வசப்பட்டுத் திரிபவர்களும், தீது அகல ஓதி பணியாரும்-தீமைகள் அகலும்படி திருமுறைகளை ஓதி வணங்காதவர்களும், தீ நரகமீதில் திகழ்வாரே-கொடி நரகத்திலே விளக்கமுற்று கிடப்பார்கள். |