பொழிப்புரை ஒலி ஒளி மயமாகத் திகழ்பவரே! நல்ல அருட்குண சீலரே! வள்ளி தேவசேனை யென்ற இரு சக்திகளை மருவுகின்றவரே! ஜோதியே! சிவஞானத்தை வழங்கும் குமாரக் கடவுளே! குற்றமில்லாத கதிர் காமத்தில் வாழும் பெருமிதமுடையவரே! பெண்கள் வசமாகி உழல்கின்றவர்களும், சிறந்த தவத்தை நினைக்காமல் திரிகின்றவர்களும், தீமைகள் விலகும்படி, திருமுறைகளை ஓதி வணங்காதவர்களும், கொடிய நரகத்தில் கிடந்து துன்புறுவார்கள். விரிவுரை மாதர்வசமாயுற் றுழல் வாரும்:- பல்லூழி காலந்தவஞ் செய்து வந்தது இம்மனிதப் பிறவி. கடலை கையால் நீக்கிக் கரைசேர்ந்தது போல் நால்வகைப் பிறப்பு, ஏழுவகை யோனிகளுடன் எண்பத்து நான்கு லட்ச பேதங்களாகிய பிறவிகளை எடுத்து எடுத்து உழன்று சுழன்று இம்மானிடப் பிறவி எடுத்தோம், இப்பிறப்பின் அருமையும் பெருமையுந் தெரியாது. பிறவிப் பயனைப் பெற முயலாது அற்ப இன்பத்தை நாடிப் பெண்கள் வசமாகி உழல்கின்றார்கள் மாந்தர்கள், அந்தோ! அந்தோ! பரிதாபம்! பரிதாபம்! மாதவமெணாற்றிரி வாரும்:- தவம் ஒன்றே சிவத்தைச் சார்விக்கும். அறஞ் செய்தால் அன்பு வரும்; அன்பு வந்தால் அருள்வரும்; அருள் வந்தால் தவம் வரும்; தவம் வந்தால் சிவம் வரும்; சிவத்தைச் சார்ந்த உயிர் பிறப்பு இறப்பு நீங்கிப் பேரானந்தப் பெருவாழ்வைப் பெற்று இன்புறும். ஆதலால்ஒவ்வொருவரும் நல்ல தவஞ் செய்ய வேண்டும். தீதகல வோதிப் பணியாரும்:- திருமுறைகளை ஓதினால் ஏனைய தீமைகள் விலகிப் போகும். காதலாகிச் கசிந்து கண்ணீர் மலகித் திருமுறைகளை ஓதவேண்டும். “திருநெறி தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே” என்பார் திருஞானசம்பந்தர். “சினமே தவிராய் திருமுறைகள் ஓதாய் மனமே உனக்கென்ன வாய்” தீ நரக மீதில் திகழ்வாரே:- மாதர்வசமானவரும், மாதவம் எண்ணாதவரும், திருமுறைகளை ஓதி இறைவனைப் பணியாதவரும் கொடிய நரகில் வீழ்ந்து கொடுந் துன்பத்தை நுகர்வார்கள். |