முடிவிலாதோர் வடக்கி லெரியும்:- வடதிசை அழிவில்லாதது என்கின்றார். அது சிவபெருமான் இருக்கின்ற திசை. தென்திசை பலகாலும் கடலால் அழிவு பெற்றத்தையும் குறிக்கின்றார் போலும். வடக்கே கடலில் நீரைச் சுவற வைக்குந் தீ வடவாமுகாக் கினி. அத்தீயைப் போல் நிலவு வெம்மையைச் செய்கின்றது. யாருக்கு? காமுகர்க்கு. ஆலமார்பிடத்து முழுகி:- ஆலம் ஆர்பு இடத்து. ஆலகால விஷம் நிறைந்து தோன்றிய கடலில் முழுகி எழுவதால் சந்திரன் நஞ்சுபோல் எரிக்கின்றான் என்கின்றார். வெதிரிலாயா்:- வெதிர்-மூங்கில். காட்டில் இயற்கையாய் விளைகின்ற மூங்கில் குழாயில் முறைப்படி துளையிட்டு ஆயர்கள் ஆடுமாடுகளை மகிழ்விக்கும் பொருட்டு இனிய ராகங்களையமைத்து ஊதுவார்கள். அது தலைவன் தலைவியர்க்கு வேதனையைத் தரும். அதிர வீசியாடும்...................ஈசர்:- இறைவனுடைய ஆட்டத்துக்கு இந்த உலகமாகிய அரங்கு காணவில்லை. அடிபேரின் பாதாளம் பேரும் அடிகள் மூடிபேரின் வான்முகடு பேரும்-கடகம் மறிந்தாடு கைபேரில் வான்திசைகள் பேரும் அறிந்தாடும் ஆற்றா தரங்கு. - அற்புதத் திருவந்தாதி “அதிரவீசிவாதாடும்விடைலேறுவாராட”- (அதலசேட) திருப்புகழ் அமரலோகம் வாழவைத்த பெருமாள்:- களைகளைப் பறித்து, நெற்பயிரை வாழவைப்பது போல், அசுர லோகத்தைப் பொடியாக்கி, அமர லோகத்தை எம்பெருமான் வாழ வைத்தருளினார். அசுரர்கள்-துர்க்குணங்கள். அமரர்கள்-நற்குணங்கள். இந்தத் திருப்புகழில் ஒவ்வோரடியிலும் பிற்பகுதிகளை எடுத்து ஒன்று கூட்டினால் எதுகையென்ற இலக்கணம் ஒன்று மட்டும் இன்றி ஏனைய இலக்கணங்களும் பொருளும் பொருந்தப் பிறிதொரு திருப்புகழ் பாடலாகித் திகழ்கின்றது. முனியு மார வார முற்ற கடலாலே முழுகி யேறி மேலெ றிக்கு நிலவாலே |