பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 315

 

தின்றால்தான் கொன்ற பாவந் தீரும். எனவே கொன்றால் பாவம் தின்றால் போகும். உயிர்களை வதைத்த பாவம் தன் உடம்பின் சதைகளைத் தின்றால்தான் தீரும். இதுதான் அப்பழமொழியின் உட்பொருள் என உணர்க.

                       “அனலூடே
தவனப் படவிட்டுயிர்செக் கிலரைத்
தணிபற்க ளுதிர்த் தெரிசெப்புருவைத்
தழுவப் பணி முட்களில் கட்டியிசித் தடவாய்கண்
சலனப்பட ஏற்றி யிறைச்சி யறுத்
தயில்வித்து முரித்து நெரித்துளையத்
தளையிட்டு வருந்தும் யமப்ரகாத் துயர்தீராய்”
                                          - (புவனத்தொரு) திருப்புகழ்

கரியபுனலே சொரிந்து:-

தசையை அறுத்து அறுத்து வாயில் வைத்து “விழுங்கு” என்ற இமயதூதுவர் இடர் செய்கின்றபோது, தன்னிறைச்சியைத் தானே யுண்ண மயங்கி சிறிது தியங்குவாராயின், உருக்கிய இரும்பு நீரை வாயில் விடுவர்.

இரும்பை உருக்கி வாயில் விட்டால் வேதனைப்படும் அவ்வுயிர் மாளாதா? எனின், அங்கு ஏற்பட்ட வுடம்பு துன்பத்தை அனுபவிப்பதற்கு மட்டும் ஏற்பட்ட எட்டு தத்துவங்களுடன் கூடிய, யாதனா சரீரம் என்க.

கழுமுனையிலே யிரு என்று விடும்:-

முன் கூறியவாறு பாவிகளைப் பலகாலும் பலவாறு தண்டனையுங் கண்டனையும் புரிந்து, “இந்தப் பாவி பிறப்பதும் இறப்பதும் பாவஞ் செய்வதுமாகவே இருக்கின்றான். சிலகாலம் கழுவில் ஏற்றி வையுங்கள்” என்று கூறி, மழுவில் எறிந்து கழுவில் ஏற்றுவர்.

அவ்வேளை கண்டு வரவேணும் என்றன் முனமேதான்:-

“முருகா! சிறியேன் பிழைசெய்தேனாயினும், என்னை நமன் தண்டித்து கழுவில் ஏற்றி, இனி தப்புவதற்கு வழியே இல்லையென்று தவிக்கும் வேளையில், கருணைக்கடலாகிய தேவரீர் விரைந்து அடியேன் முன் வந்து காப்பாற்றுவீர்.

“என்று நீ அன்று நான் உன்னடிமை யல்லவோ?” உனது அடிமையாகிய என்னை, நீயே தண்டனை செய்; அல்லது, உனது அடிமையாகிய, வீரவாகு தேவர், வேறு பலவாகவுள்ள பூதகணங்கள் தண்டிக்கட்டும். இயமன் கையில் காட்டிக் கொடுக்காதே.