மக்களை தந்தையே தண்டிப்பான்; அல்லது தாயை விடுத்தும், மூத்தமகனை விடுத்தும் தண்டிப்பான்; அப்படிக்கு இன்றி வீதி வழியே போகும், குண்டாந்தடிபபயில்வானிடம் தந்து தண்டிக்கவிடுவது பொருந்துமோ? அதுபோல் எளியேனை எமதண்டனைக்கு ஆளாக்காமல் காப்பற்றும். இடும்பன் பழநிமலை:- பழநிமலை இடும்பன் என்ற ஒருவன் கொணர்ந்து வைத்தது. அதனால், “இடும்பன் பழநிமலை” என்று கூறியருளினார். இடும்பன் வரலாறு செந்தண்மை மிக்க பைந்தமிழ் முனிவராகிய அகத்தியர், கந்தகிரி சென்று, கந்தவேளைச் சிந்தையன்புடன் தொழுது துதித்து, “ஐயனே! பன்னிகையனே! அடியேன் பொதியமலையில் வைத்துப் பூசிப்பதற்கு, ஈண்டு சிவ சொரூபமாகவும் சக்திரூபமாகவும் விளங்கும்,சிவமலை சத்திமலை என்ற இரு சிகரங்களையும் தந்தருளல் வேண்டும்” என்று வேண்டினார். வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டுமளவில் உதவும் வேலாயுதக் கடவுள் அவ்வாறே அகத்தியனாருக்கு அருமலைகள் இரண்டையும் அளித்தருளினார். அகத்தியனார் மகத்துவ மிக்க அத்திருமலைகள் இரண்டையும் பெயர்த்துக் கொண்டு பூவுலகின்கண் வந்தார். பூர்ச்சவனம் என்னும் தலம் வந்ததும், செவ்வேளின் திருவருளால் அச்சிகரிகள் இரண்டினையும் அங்கு வைத்துப் பொதியை நோக்கி வருவாராயினார். சூரபன்மன்,சிங்கமுகன், தாரகன் என்னும் அசுரர்களின் சேனைகளுக்கும், அக்குலத்தினருக்கும் வில்வேதமாகிய அத்திரசத்திர வித்தைகளைப் பயிற்றியவன் இடும்பாசுரன்.மனைவி இடும்பி, சூராதியவுணர்கள் வேலாயுதத்தினால் ஒடுங்கிய பின், வில்லாசிரியான இடும்பன் தன் மனைவி இடும்பியுடன், வீரமகேந்திரபுரியை விடுத்து, சிவ சிந்தையுடன் வனசஞ்சாரம் புரிந்து கொண்டிருந்தான். ஒரு சிறந்த வனத்தில் சிவபெருமானை நேசித்துப் பூசித்தான். சிவபெருமான் தோன்றியருளினார். இடும்பன். எல்லையில்லாத மகிழ்ச்சியுடன் தொழுதான்; அழுதான்; “எந்தையே! ஈசனே! இமையவர் நேசனே! அடியேன் திருவருளைப் பெறவேண்டும்” என்று வேண்டினான். அரனார் அவ்வரம் நல்கி மறைந்தருளினார். |