பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 317

 

அவன் சிவமூர்த்தியை வழிபட்ட தலம் இடும்பவனம் எனப்பட்டது. அது கோவிலூருக்குத் தென்கிழக்கே பத்து கல் தொலைவில் உள்ளது.

இடும்பன் மனைவியுடன் வனச்ஞசாரம், புரிந்து கொண்டு திருக்குற்றால மலையைச் சார்ந்தான். அங்கு அகத்திய முனிவரைக் கண்டு, அவரது அடிமலர்மீது வீழ்ந்து வணங்கி “தவப் பெருந்தலைவரே! தயாநிதியே, அடியேன் சூராதியவுணர்களின் வில்லாசிரியன், கந்தவேள் கருணையை நாடி நிற்கின்றேன். தேவரீர் முருகவேளின் சீடரன்றோ! சிறியேனைக் குமரவேளின் திருவருட்கு உரியவனாக்கி ஆண்டருள்வீர். அடியேன் உமது அடிமலர்க்கு அடைக்கலம்” என்று வேண்டினான்.

அகத்தியனார் அவனை அருட்கண்ணோக்கம் புரிந்து, அஞ்சேல் என்று அங்கையமைத்துக் கூறுவார். “அன்பனே! உனக்குக் குமரவேள் திருவருள் கிடைக்கும். திருக்கேதார தலத்திற்கு அருகில் உள்ள பூர்ச்சவனத்திலே சத்திகிரி சிவகிரி என்ற இரு சிகரங்கள் இருக்கின்றன. அவற்றையெடுத்து நம்பொதியமலைக்கு வருவையேல் உனக்குக் குமரநாயகன் திருவருள் கிடைக்கும். அழியாத புகழும்பெறுவாய். அத்திரு மலைகளின் பெருமை செல்லுந்தரமன்று; சென்று கொணர்தி” என்று பணிந்தருளினார். அங்கும் செல்லும் வழியையும் உணர்த்தி, பணிந்தருளினார். சடக்கர மந்திர உபதேசமும் செய்து அனுப்பினார்.

இடும்பன் தன்மனைவி இடும்பி யென்பாள் காய்கனி கிழங்குகள் தந்து உபசரித்துவர, குறுமுனியாகிய குருபரன் கூறிய வழியே சென்றான். இடையில் உள்ள திருத்தலங்களையெல்லாம் தரிசித்துக் கொண்டு பூர்ச்சவனம் என்னும் திருத்தலத்தைச் சேர்ந்தான். அங்கு அகத்தியா வைத்த சத்திகிரி சிவகிரிகளைக் கண்டு களித்தான். “யானே தவமுடையனே; என் புண்ணியமே புண்ணியம்” என்று உள்ளம் உவந்தான். பூசைக்குரிய சாதனங்களை மனைவி ஆயத்தம் புரிந்து தர இடும்பன் அம்மாமலைகளைப் பூசித்தான். அகத்தியர் உபதேசித்த சடக்கர மந்திரத்தை விதிப்படி ஜெபித்துக் கண்களை மூடி, ஒருமையுடன் தவம் புர்ந்தான்.

அப்போது பிரமதண்டம் புயதண்டாகவும், அட்டதிக்கு நாகங்களும் கயிறுகளாகவும் அவனருகில் வந்தன.