அவற்றை கண்டு அதிசயித்த அத்திருவாளன் துன்ணென்றெழுந்து, எட்டு நாகங்களையும் உறிபோற் சமைத்து, இரு மலைகளையும் அதில் வைத்து, பிரமதண்டுடன் பிணித்து, மூல மந்திரத்தைச் சிந்தித்து, முருகவேளை வந்தித்து, காவடியாக்கி எடுத்துத் தோளில் வைத்தான். முழங்காலை மண்ணில் ஊன்றி யெழுந்தான். “அரோகரா!” “அரோகரா!” என்று கூவிக்கொண்டு தென்திசை நோக்கி நடந்தான். பல காதங்கள் கடந்தான். பன்னிருகட்பரமன் திருவிளையாட்டினால், வழி மயங்கி, விந்தமலை வழியாக, ஸ்ரீசைலம், திருக்காளத்தி, திருத்தணிகை, திருக்காஞ்சி, திருவருணை, திருமுதுகுன்றம் முதலிய தலங்களைச் சேவித்துக் கொண்டு வந்தான். ஆங்காங்கு காவடியை யிக்கி இறைவனை, வழிபட்டு, மனைவி தேடித்தரும் காய்கனிகை யருந்தி, தண்ணீர் பருகி இளைப்பாறிக்கொண்டு சென்னிமலை யென்ற புட்பகிரியைச் சார்ந்தான். அங்கு வழி தெரியாது மயங்கினான். அங்கு அறுமுகவேள் ஓர் அரசகுமாரனைப்போல் தோன்றி “இடும்பைக்கு இடும்பை தரும் இரும்பா? நீ இவ்வழியே போய் வராகமலை தங்கி, அவ்வழியே பொதியா சலம் போகக்கடவாய்” என்று கூறியருளினார். இடும்பன் அகமகிழ்ந்து வராகமலை வழி சென்று திருவாவினன்குடியை யடைந்தான். திருவேலிறைவன் திருவிளையாட்டால் மலைகள் மிகவும் பாரமாகித் தோளை வருத்தின. இடும்பன் சிறிது இளைப்புடன் காவடியை இறக்கி வைத்துவிட்டு, வாமதேவ முனியாச்சிரமஞ் சென்று, இடும்பி தந்த இனிய காய் கனி கிழங்குகளை யுண்டு இளைப்பாறி, மீண்டும் மலைகளைத் தூக்கத் தொடங்கினான். எத்துணை முயன்றும் காவடி எழவில்லை. பெருமூச்சு விட்டான். மீண்டும் மீண்டும் பெரிதும் முயன்று எடுக்கலுற்றும் மலைகள் மேல் எழாமை கண்டு கவலையுற்றான், சுற்றும் முற்றும் பார்த்தான். சிவகிரியின் மீது ஒருபுறம் குராமர நிழலில் ஒரு சிறு குழந்தை நிற்பதைக் கண்டான். அசுரகுல திலகன் அதிசயித்தான். “ இப்பாலகன் யாவன்? தேவகுமாரனோ? இயக்கனோ? சித்தனோ? முருகவேளோ?” என்று ஐயுற்று அருகிற் சென்றான். அமரர் போற்றுங் குமரநாயகன், பிடரியில் இருண்டு சுருண்ட தலைமயில் தொங்கவும், கருணையொழுகும் கண்களும், ஆயிரகோடி சூரியர் ஒருங்கே திரண்டாலன்ன ஒளி மிகுந்த |