எறிந்த கூர்வேலவர்; சூரமுதல் தடித்த சீராளர்” என்று திருவருள் உணர்ந்தாள். ஓடி எம்பிரான் இணையடி மீது வீழ்ந்தாள். “தேவதேவா! மூவர் தொழும் முதல்வா! நினது திருவிளையாடலின் திறத்தை யறியாத எனது கணவனைக் கொல்வது முறையோ? கருணைக் கடலே! “புங்கவர் வழத்தும் வேற்கைப்புனிதனே அயிராணிக்கு மங்கல நாணை யீந்த வரதனே என்று நின்றாட் பங்கயம்போற்றும் நாயேன் பதியினை யளித்துப் பொன்னாண் இங்கெனக்களிப்பாய் தண்டம் ஏந்திய இளைய தேவே. வேலனே போற்றி ஞான விகிர்தனே போற்றி ஞானக் கோலனே போற்றி தெய்வக் குமரனே போற்றி ஞான சீலனே போற்றி தேவ தேவனே போற்றிபோற்றி” என்று துதித்தாள். அவள் கண்களினின்றும் கண்ணீர் ஆறாய்ப் பெருகியது. அங்குள்ள கல்லும் உருகியது. அயில்வேற் கடவுள் மயில்மேல் காட்சி தந்தருளினார். கணங்கள் புடைசூழ்ந்தன. வேதங்கள் ஒலித்தன; தேவதுந்துபிகள் முழங்கின; கந்தவேள் கடைக்கண் கருணை இடும்பன் மீது வீழ்ந்து. தூங்கி யெழுந்தவனைப் போல் துண்ணென எழுந்தான். அண்டர் நாயகனைக் கண்டான். ஆராத காதல் கொண்டான்; ஆகுலத்தை விண்டான். “திருமுருகா! திருமால் மருகா! பார்வதி பால! அமரர் போற்றுங் குமரநாயக! சிறியேன் அறியாது செய்த பெரும்பிழையைப் பொறுத்தருள்க” என்று அடிமலர்மீது வீழ்ந்து துதித்தான். பழநியாண்டவர் “அன்பா! அஞ்சற்க. இம்மலைகள் இங்ஙனமே இருக்கத்தக்கன; குறுமுனியும் ஈண்டு வந்து வழிபடுவானாக. அடியார்கள் அனைவரும் ஈண்டு வந்து வந்தித்து வேண்டுவன பெறுவார்களாக. நீ இம்மலையின் இடைப்பகுதியில் நமக்கு அடியவனாய் நிற்பாய். உலகில் உள்ளோர் வழிபாட்டிற்குரிய சாதனங்களை உன்போல் காவடியாகக் கொணர்வார்க்ளாக. உன்னை வணங்கினோர் எம்மை வணங்கியப் பயனைப் பெறுக. நமது பூரண அருளை நீ பெற்றாய்” என்று திருவருள் புரிந்து நின்றனர். அதுமுதல் பழநிமலைக்கு எண்ணில் காவடிகள் கொணர்ந்து இடும்பனையும் தண்டபாணியாகிய கடம்பனையும் அடியார்கள் என்றும் வழிபட்டு இன்புறுவாராயினார்கள். |