விதித்து ஞாலம்:- அவரவர்கள் கன்மங்களுக்கு ஏற்ப விதிக்கின்றவன் பிரமன், ஞாலம்-பூமி நால்-தொங்குவது. நால்வாய்-தொங்குகின்ற வாய். நால் என்ற சொல் ஞகரம் போலியாய் ஞால் எனதிரிந்தது. அம் சாரியை புணர்ந்து “ஞாலம்” என்றாயிற்று. ஞாலம் என்றால் தொங்குவது என்பது பொருள். ஓர்முடிகரத்துலாய்:- பிரமன் தான்படைப்புத் தலைவன் என்று தருக்குற்றதனால் சிவபெருமான் வைரவரை யேவி பிரமனுடைய நடுத்தலையை நகத்தினால் கிள்ளச் செய்தார். “நல்லமலரின் மேல்நான்முகனார்தலை ஒல்லை யரிந்த தென்றுந்தீபற உகிரால் அரிந்த தென்றுந் தீபற” - திருவாசகம் காமனையெரித்த:- சிவமூர்த்தி மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்தருளினார். திருமாலின் மக்களான பிரமனைத் தலையரிந்தும் மதனனைச் சாம்பலாக்கியும் தண்டித்தருளினார். ஆயிரவிடப் பணாமுடி நடுக்க:- மயில்நடப்பதனால் ஆதிசேடனுடைய ஆயிரம்பணாமகுடங்களும் நடுங்குகின்றன. “சேடன் முடிதிண்டாட ஆடல்புரி வெஞ்சூரர் திடுக்கிட நடிக்கு மயிலாம்” “பாரப்பணாமுடி அனந்தன் முதல் அரவெலாம் பதைபதைத்தே நடுங்க” - மயில்விருத்தம். அறத்தில் வாழுமை சிறக்க:- காஞ்சிமா நகரில் காமாட்சியம்மை முப்பத்திரண்டு அறங்களையும் செய்தருளினார். சிறக்க-மகிழ. “குறைவற முப்பத்திரண்டறம்புரி கின்றபேதை” - (தலைவலை) திருப்புகழ் அருக்கொணாமலை தருக்குலாவிய:- தருக்கு-மகிழ்ச்சி. “கீதம் வந்த வாய்மையால் கிளர்தருக்கினார்” - சம்பந்தர் அருங்கொணாமலை என்பது கீரிமலை யெனவும் வழங்குகின்றது. இத்தலம் யாழ்ப்பாணத்திலிருந்து 12 கல் தொலைவில் கடற்கரையில் திகழ்கின்றது. |