பக்கம் எண் :


328 திருப்புகழ் விரிவுரை

 

வெறுப்பை யடைந்து, உழைத்தே விடாய் படு-மீளமீள உலக வாழ்வில் உழைத்து தாமமுறுகின்ற, கொடியேனை-கொடியவனாகின்ற அடியேனை, கலக்கம் ஆகவெ-அறிவு கலக்கமுற்று, மலகூடிலே-மலக்கூடாகிய இவ்வுடம்புடன் கூடி, மிகு பிணிக்கு உள் ஆகியெ-மிகுந்த நோய்களுக்கு உள்ளாகி, தவிக்காமலே-தவியாமற் படிக்கு, உனை கவிக்குளாய் சொலி- தேவரீரை தமிழ்க் கவிதைகளைச் சொல்லி கடைத்தேறவே செயும்- ஆவியீடேறுமாறு செய்தருளிய, ஒரு வாழ்வே- நிகரற்ற வாழ்வாக விளங்குபவரே! கதிக்கு நாதன் நி-பரகதிக்குத் தலைவர் நீரே, உனை தேடியே- தேவரீரைத் தேடி, புகழ் உரைக்கும் நாயேனை-திருப்புகழ் பாடும் நாயேனை, அருள்பார்வையாகவெ-திருவருட் பார்வையாகப் பார்த்து, கழற்குள் ஆகவே- தேவரீருடைய திருவடிக்குள்ளாகுமாறு, சிறப்பு ஆன-சிறந்ததாகிய, தாய் அருள்-தாயின் கருணையை யொத்த திருவருளை, தரவேணும்-தந்தருள்வீர்.

பொழிப்புரை

மலைகளுக்குத் தலைவரே! உமையம்மையாருடைய கொழுநராகிய சிவபெருமானுடைய திருப்புதல்வரே! ஆறு திருமுகங்களையுடைய குருநாதரே! ஒப்பற்ற அழகின்மிக்க வள்ளியம்மையார் விரும்பி மகிழும் மணவாளரே! வசிட்டர், காசிபர், தவத்திற் சிறந்த சிவயோகியர், பெருமையின்மிக்க அகத்திய முனிவர், இடைக்காடர், நக்கீரதேவர் ஆகிய அறிவானான்ற பெரியோர்கள் வகுத்துப் பாடிய பாடல்களில் உட்பொருள் வடிவமாகத் தோன்றுபவரே! நிலைத்துள்ள வேதங்கள் நான்கையும் ஓதியுணர்ந்த சிறந்த அந்தணர்கள் வாழுகின்ற திருக்கோணமலையென்னும் திருத்தலத்தில் விளங்குகின்ற கோபுரவாயிலில் கிளிப்பாடுபூதி யென்னும் இடத்தில் எழுந்தருளியுள்ளவரே! (ஆன்மாவை இங்குமங்குமாக) தொழிற்படுத்துகின்ற தாவரம், ஊர்வன, நீர்வாழ்வன, பறப்பன, விலங்கு, மனிதர், தேவர் என்ற எழுவகைப் பிறவிகளாகிய ஏழுகடல்களும் புழுதிபட்டுக் கொள்ளைபோக வேலாயுதத்தை விடுகின்றவரும், நினைத்த காரியங்களை அநுகூலமே புரிந்தருளுகின்றவரும் ஆகிய பெருமையின் மிக்கவரே! விலைசெய்கின்ற உடம்பில் அழகிய மாலைகள் உடுக்கின்ற ஆடை இரத்தினாபரணங்கள் இவற்றை யணிந்து மினுக்குகின்ற விலைமகளிரிடத்தில் காமுற்று மயக்கக் கடலில் முழுகி அதிலேயே ஊறி மிகுந்த விருப்பினனென்று உலகிலுள்ளோர் சிரிக்குமாறு உடம்பெடுத்து துன்ப மிகுதியால் வெறுப்புற்று உலக மாயையில் உழைத்து அதிதாக முற்றகொடியவ