னாகிய அடியேனை, அறிவு கலக்குற்று மலபாண்டமாகிய உடலுடன் கூடி மிகுந்த நோய் வாய்ப்பட்டு தவிக்காமற் படிக்கு தேவரீரைத் தமிழ்க்கவிபாடி கடைத்தேறச் செய்தருளிய எம்பெருமானே! தேவரீரே முத்தி உலகிற்குத் தலைவர்; உமது திருவடியையே தேடி திருப்புகழ் பாடுகின்ற அடியேனைத் திருவருட் பார்வையாகப் பார்த்து உமது சரணாரவிந்தங்களுக்கு ஆளாகுமாறு சிறந்த தாயருளைத்தந்து ஆட்கொள்வீர். விரிவுரை விலைக்கு மேனியி.................மயிலூறி:- விலைக்குமேனி என்பதற்கு விலைபடுத்துகின்ற மேனி என்பது கருத்து. மேகலை என்பது இடையில் பெண்களணியும் ஓர் ஆபரணம். மினுக்குமாதர்- விலைமகளிர். “விலைமகட்கழகு தன் மேனி மினுக்குதல்” என்பது நறுந்தொகை. விலைமாதரிடத்தில் விருப்பத்தை வைத்து அவர்களது ஆசைப் பெருங்கடலுளாழ்ந்து அதிலேயே ஊறிக் கொண்டிருத்தல். மிகுத்த காமியன்.......................................கொடியேனே:- உலகத்தவர்கள் இவன், “மிகுந்த காமி” என்று எள்ளி நகையாட சிறிதும் நாணமின்றி உலாவியும், அதனால் மிகுந்த வியாகுலமுற்றும், நல்ல விஷயத்தில் வெறுப்புற்றும், குடும்பத்திற்காகவும் வயிற்றுக்காகவும், உழைத்து உழைத்து அருள் தாக மடையாமல் காமதாகமடைந்து தடுமாறி விலை மதிக்கமுடியாத மாணிக்கமாகிய வாணானள வீணாக்குவதைச் சுவாமிகள் வெறுக்கின்றனர். உனை கவிக்குளாய் சொலி கடைத்தேற வேசெயு:- செந்தமிழ்ப் பரமாசிரியராகிய செவ்வேட் பரமன் அருணகிரியார்க்கு அருட்கோலங் காட்டி, “அறியுமறி தத்துவமும் அபரிமித வித்தைகளும் அறியென இமைப் பொழுதில் வாழ்வித்து” “நம் திருப்புகழைப் பாடுதி” என்று பணித்தருளினார். அருணகிரிநாத சுவாமிகள் கடல் மடை திறந்த வெள்ளம் போல், வேதாகமபுராணேதிகாசக் கருத்துக்களை யெல்லாம் அமைத்து, தொனிக்க இனிப்பதும், சித்தத்தில் சிந்திக்குற் தொறும் தித்திப்பதும், நினைத்தது மளிப்பதும், கருங்கல் மனத்தையும் கரைந்துருகச் செய்வதும், கருவறுத்துப் பிறவாட் பெற்றியை எளிதில் தருவதுமாகிய பதினாறாயிரந் தமிழ் வேதத் திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியருளினார். |