“அற்புதத் திருப்புகழ் தேனூற வோதி எத்திசைப் புறத்தினும் ஏடேவு ராஜதத்தினைப் பணித்ததும் மறவேனே” - (ஆனாதஞான) திருப்புகழ் கதிக்கு நாதனி:- கதிக்கு நாதன்நீ. நீ என்பது குறுகல்விகாரம் பெற்றது; கதி-முத்தி. முத்தி உலகிற்கு முதல்வன் முருகக் கடவுளே. பரகதியும் அவரே. “தெரிசன பரகதி யானாய் நமோநம” - (அவகுண) திருப்புகழ் தாயருள் தரவேணும்:- தாய்மகவினிடம் காட்டுங் கருணை நிகரற்றது; பயன் கருதாதது; இறைவனுடைய கருணைக்கு ஏகதேச உவமையாக உள்ளது. இறைவனைப் “பொன்னே மணியே” என்று ஆன்றோர்கள் கூறுகின்றனர். “பொன்னே மணியே பொருளே யருளே மன்னே மயிலே நியவா னவனே” - அநுபூதி (27) இறைவன் பொன்னினும் மணியினும் பல்கோடி மடங்கு சிறந்தவர். எனினும் நமக்குத் தெரிந்த பொருள்களுக்குள் பொன்னும் மணியும் சிறந்தன. ஆதலினால் நாமறிந்த பொருள்களுக்குள் உயர்ந்தவற்றின் பேரால் இறைவனை யழைக்கின்றோம். அதேபோல் ஆண்டவன் வரம்பற்ற கருணை யுடையவர். நமது வாழ்வில் நாம் அறிந்தவற்றுக்குள் தாயன்பு சாலச் சிறந்தது. ஆதலினால் ஆன்றோர்கள் இறைவன் கருணையைக் குறிப்பிடும்போது தெல்லாம் தாயின் கருணையைக் குறிப்பிடுவர். “பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப்பரிந்து” “தாயிற் சிறந்த தயாவான தத்துவனே” “தாயினும் நல்லன்” “ஆய்புரி அருட்செறிந்தவி நாசியுள் மேவிய பெருமாளே” - (மனத்திரைந்தெழு) திருப்புகழ் “தாய்போலடியார் தமைப்புரப்பார்” மலைக்குநாயக:- குமராக் கடவுள்குறிஞ்சி நிலக் கடவுள். “சேயோன் மேய மைவரை யுலகும்” - தொல்காப்பியம். “குறிஞ்சிக்கிழவனென் றோதுங் குவலயமே” - அலங்காரம் (5) முருகவேளின் முழுமுதற் றன்மையை யறிந்த பண்டைத் தமிழ்கள், உயர்ந்தவனை உயர்ந்த இடத்தில் வைப்பதுபோல், மயிலேறும் வள்ளலை மலைமிசை வைத்து வணங்கினர். |