இதயந் தனிலி ருந்து க்ருபையாகி இடர்சங் கைகள்க லங்க அருள்வாயே எதிரங் கொருவ ரின்றி நடமாடும் இறைவன் தனது பங்கி லுமைபாலா பதியெங் கிலுமி ருந்து விளையாடிப் பலகுன் றிலும மர்ந்த பெருமாளே பதவுரை எதிர்ங்கு ஒருவர் இன்றி-அந்தத் தேவ சபையில் தனக்கு சமானம் ஒருவரும் இன்றி, நடம் ஆடும்-ஆனந்தத்தாண்டவஞ் செய்தருளும், இறைவன் தனது பங்கில்-சிவபெருமானுடைய இடப்பாகத்தில் விளங்கும், உமை பாலா- உமாதேவியாருடைய திருக்குமாரரே! பதி எங்கிலும் இருந்து விளையாட- திருத்தலங்கள் எங்கணும் நின்று திருவிளையாடல் புரிந்து, பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே-பல மலைகளிலும் எழுந்தருளிய பெருமையின் மிக்கவரே! அதிரும் கழல் பணிந்து-இனிது ஒலிக்கும் வீரக்கழலை யணிந்துள்ள தேவரீரது திருவடிகளைத் தொழுது, உன் அடியேன்-தேவரீருடைய தொண்டனாகிய நாயேன், உன் அபயம் புகுவது என்றும்-உமது திருவடியே புகலிடமென்று நாள்தோறும் தஞ்சம் புகுகின்றேன்; (ஆதலால்) நிலைகாண - மெய்ந் நிலையைக் காணுதற்கு, இதயந்தனில் இருந்து-தேவரீர் அடியேனுடையஉள்ளத்தில் வீற்றிருந்து, க்ருபை ஆகி-கருணை செய்து, இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே-அடியேனுடைய துன்பமும் சந்தேகங்களும் கலங்கி யொழியத் திருவருள் புரிவீர். பொழிப்புரை தனக்குவமையின்றி தனிப்பெருந் தலைவராய்த் தேவசபையில் நின்று அநவரத ஆனந்தத் தாண்டவம் புரியும் எப்பொருட்கும் இறைவராகிய சிவபெருமானுடைய இடப்பக்கத்தில் விளங்கும் உமையம்யைாரது திருப்புதல்வரே! திருத்தலங்கள் எங்கணும் எழுந்தருளிப் பல திருவிளையாடல்களைப் புரிந்து, மலைகள் தோறும் நின்று நிலவும் பெருமிதமுடையவரே! இனிது ஒலிக்கும் வீரக்கழலையணிந்த தேவரீரது திருவடிகளைப் பணிந்து, உமக்கே மீளா அடிமைப்பட்ட நாயேன், உம்மையே நாடோறும் சரணம் புகுகின்றேன்; ஆதலால், அடியேனுடைய உள்ளத்தில் தேவரீர் எழுந்தருளிக் கருணை செய்து, எனது துன்பங்களும் சந்தேகங்களும் கலங்கி யழியுமாறு அருள் புரிவீர். |