பெருமிதம் உடையவரே! ஏழு என்ற எண்ணிக்கையுடன் விளங்கும் உலகங்களை ஒரு நொடிப் பொழுதுக்குள் வலமாக அழகுடன் மயிலில் வந்தவரே! தேவர்கள் துதி செய்து திருவடியை வணங்க அசுரர்கள் மடியுமாறு வேலாயுதத்தை விட்டருளியவரே! பாண்டிய மன்னர்கள் வளர்ந்த தமிழில் செய்த அகப்பொருள் இலக்கணத்தில் உரையைச் சங்கப் புலவர்கள் வழிபட்டுக் கேட்க, உணர்த்திய முருகப் பெருமாளே! மலர்போன்ற திருவடியைத் தொழுகின்ற இம்மடமகள் பசலை நோயுற்று மயல்கொண்டு தளர்ச்சியடைவது உமது கருணைக்கு அழகாகுமோ? விரிவுரை எழுதிகழ் பவன நெடியளவதனில் இயல்பெற மயிலில் வருவோனே:- கனி காரணமாக முருகவேள் மாமயிலின் மீது ஆரோகணித்து ஏழு உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதில் எங்குத் தானாகுந் தன்மையை உலகம் உணர்ந்து உய்யும்பொருட்டு வலம் வந்தருளினார். இதன் விளக்கத்தை திருப்புகழ் விரிவுரை (முதல் தொகுதி 3-ஆம் பக்கத்தில் காணலாம்). இமையவா்:- கண்கள் இமைக்காமையால் தேவர்கள் இமையவர் என்று பேர் பெற்றார்கள். எப்போதும் எச்சரிக்கையாக விழிப்புடன் இருப்பவர்கள் என்பது பொருள். வழுதியர்தமிழின்:- வழுதியர்-பாண்டியர். மதுரையில் பாண்டிய மன்னர்கள் தமிழ்ச் சங்கம் அமைத்துத் தமிழை வளர்த்தார்கள். ஒரு பொருளதனை வழிபட மொழியும்:- இறையனார் அகப்பொருள் என்ற நூலுக்குச் சங்கப் புலவர்கள் உரை கண்டார்கள். அவற்றுள் எது சிறந்த உரையென்று தெளிவு பெறாமல் தமக்குள் வாதிட்டுக் கொண்டர்கள். இறைவன் கட்டளைப்படி, முருகவேளின் திருவுருவாய்ந்த உருத்திர சன்மரை யழைத்து வந்து சங்கப் பலகை மீது எழுந்தருளச் செய்து, சங்கப் புலவர்கள் தாம் உரைத்த உரையைக் கூறினார்கள். உருத்திரசன்மர். மற்ற உரைகளைக் கேட்டு ஒவ்வோரிடங்களில் மட்டும் சிரக்கம்பம் புரிந்தும், நக்கீரர் செய்த வுரையைக் கேட்டு முழுவதும் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தும், சிரக்கம்பம் கரக்கம்பம் புரிந்து சிறந்த உரையென விளக்கியருள்புரிந்தார். |