மலரடி பணியும் மடமகள் பசலை மயல் கொடு தளர்வதழகோதான்:- இப் பாடல் அகப்பொருள் துறையாக அமைந்தது. பசலை என்பது ஒரு பெண்ணுக்குக் காமநோயால் உண்டாகும் நிறவேறுபாடு. இறைவன் நாயகனாகவும் ஆன்மாவை நாயகியாகவும் கொண்டு, இறைவனாகிய நாயகன்மீது வைத்த ஆசை நோயினால் பசலையுற்று நாயகி வருந்துகின்றான். மடமகள்:- மடம் - கொளுத்தியது விடாமை. ஆன்றோர்கள் கூறிய அறிவுரையை விடாது பற்றிக் கொள்ளுங் குணம். இறைவனே! உன்னையடையப்பெறாது ஆன்மாவாகிய இப்பெண் தளர்ச்சியடைகின்றாள். அங்ஙனம் தளர்வது நின் கருணைத் திறனுக்கு அழகு ஆகுமோ? ஆகாது. ஆதலால் விரைந்து ஆட்கொள்வாய். முழுகிய புனலில் இனமணி தரள முறுகிடு பவள மிகவாரி முறையொடு குறவர் மடமகள் சொரியு முதுமலை:- தண்ணீரில்முழுகி நிரம்பவும் முத்து மணிகளை வாரியெடுப்பர். பவளத்தைப் பின்னலாக முறுக்கி மாலை செய்வார்கள். குறப்பெண்கள் முத்தையும் பவளத்தையும் சுமந்து பழமலையென்ற தலத்தில் “முத்தோ! பவளமோ!” என்று கூவிவிற்பார்கள். அங்ஙனம் விலை கூறி யழைத்து, நிரம்பவும் சொரிந்து விற்பார்கள். இத்தகைய வளமையுள்ளது பழமலைக்கு அருகில் ஓடுவது மணிமுத்தாறு என வுணர்க. “திறங்கொள் மணித் தரளங்கள் வரத்திரண்டங் கெழிற்குவறர் சிறுமிமார்கள் முறங்களினால் கொழித்து மணி செலவிலக்கி முத்துலைப்பெய் முதுகுன்றமே” - சம்பந்தர் அருணகிரிநாதர் திருஞானசம்பந்தருடைய தேவாரத்தில் ஈடுபாடுடையவர் என்பது இதனால் தெளிவாகின்றது. பழகிய வினைகள் பொடிபட:- முன்செய்து விளைந்த வினைக் கூட்டங்கள், ஆன்மாவுடன் பழகி உடனாக வந்து பயன் விளைவிக்கும். அவ்வினைகள் முருகன் அருளால் வெந்து நீறாகும். அருளில் படிவர்இதயமுறுவோனே:- திருவருளிலேயே அடியவர்கள் தோய்ந்து நிற்பார்கள். அவ்வண்ணந் திருவருளில் தோய்ந்து அருள் வசப்பட்ட அடியவர்களது |