செய்யும் யோகத்தில் ஒன்றுபட்ட விந்து நாதங்களால் சொல்ல முடியாததும், சேரவொண்ணாததும், நினைய வொண்ணாததுமான தயையோடு கூடி தலைமை பெற்றுள்ள மனோலய சிவசமாதியைத் தேவரீர் வந்து அடியேனுக்குத் தந்தருள்வீர். விரிவுரை இப்பாடலில்பிற்பகுதியில் 10-முறை நாயக என்று வருவது போற்றற்குரியது. தறைமின்மானுடர்:- எதுகைநோக்கி கரை என்பது வல்லின ‘ற‘ கரம் பெற்றது. கம்பராமாயணப் பாடலையும் சான்று காண்க. “அறையு மாடரங்கும் மடப்பிள்ளைகள் தறையிற் கீறியிடிற் றச்சருங் காய்வரே” ஆசையினால் மடல் எழுதும்:- பண்டைக்காலத்தில் ஆடவர் தாங் காதலித்த பெண்ணை யடையும் பொருட்டு, மடற்பரியின்மீது மடலெழுதி ஊராரறிய வலம் வருதல் வழக்கில் இருந்து. காய்சின வேலன்ன மின்னியல் கண்ணின் விலைகலந்து வீசின போதுள்ள மீனிழந் தார்வியன் தென்புலியூர் ஈசனசாந்து மெருக்கு மணிந்தோர் கிழிபிடித்துப் பாய்சின மாவென வேறுவர் சீறூர்ப் பனைமடலே. - திருக்கோவையார் காம முழந்து வருந்தினார்க் கேம மடவல்ல தில்லை வலி. - திருக்குறள். தோதக சரசர்:- வஞ்சகமான காமசேட்டை; விலைமகளிர் பொருள் பறிக்கச் செய்யும் சூழ்ச்சிகள். ஓதி:- பெண்மயிர். “வாழைப்பூ வெனப் பொலிந்த வோதி” - சிறுபாணாற்றுப்படை சவலை:- பெண்களுடைய அழகிய மயிர், தனம், இடை, நடை, உடை, மொழி, விழி இவற்றைக் கண்டு உள்ளம் உடைந்து, உருகி, உணர்வு இளைத்துத் தேய்ந்து மெலிந்து போவது, சவலை - பாலில்லாக் குழந்தை. அதுபோல் இளைத்து மெலிவது. |