வந்தியர் போல-புகழ்ந்து பாடுகின்றவரைப்போல, வீணில் அலையாதே பயனின்றி அலைந்து அழியாமல், செம்சரண்-தேவரீருடைய சிவந்த தாள்மலர்களையும், நாத கீத கிண்கிணி-பாகதத்திலணிந்துள்ள நாத கீதங்களுடன் கூடிய கிண்கிணிகளையும், நீப மாலை-கடப்பமலர் மாலையையும், திண்திறல் வேல் மயூரம்-மிகுந்த வலியையுடைய வேலையும் மயிலையும், ஆறுமுகங்களையும், செந்திழ் நாளும் ஓதி-செந்தமிழ் மொழியால் நாள்தோறும் துதிசெய்து, உய்ந்திட-அடியேன் உய்யும் பொருட்டு, ஞானம் ஊறு- மெய்ஞ்ஞானம் சுரந்து ஊற்றெடுக்கின்ற, செங்கனி வாயில்-தேவரீருடைய சிவந்த திருவாக்கினால், ஓர் சொல்-ஒப்பற்ற ஓர் உபதேச மொழியை, அருள்வாயே-அருள்புரிவீர். பொழிப்புரை பாண்டியனுடைய நெடிய கூனும், (சம்பந்தப் பெரமான் திருமடத்தில் அமணர் தீ வைத்ததனால்) வந்து பொருந்திய வெப்பு நோயும் பஞ்சுபோல் பறந்து போகுமாறும், தங்கள் சமயமே மெய்ச் சமயம் என்று வாதுசெய்த சமணர்களாகிய ஊமைகள் வெப்பமான கழுவில் ஏறி யழியுமாறும் (ஞான சம்பந்தப் பிள்ளைாராக வந்து) தமிழ் வேதத்தை ஓதீ யருளிய ஞான பண்டிதரே! சிவஞானத்தைத் தருகின்ற திருநீற்றைத் தந்தவரே! யானை, யாளி முதலிய விலங்குகள் உலாவுகின்ற பசுமை தங்கிய தினைப்புனத்தின் கண் திரிகின்ற வேடுவர்கள் ஒருங்குகூடி வெறியாட்டயந்து வணங்க அவர்களது அன்புக்கு மகிழ்ந்து அவர்கட்கு நல்வாழ்வு நல்கி அவர்களுடன் மலைகள் தோறும் நின்று ஆடல்புரிகின்ற பெருமிதமுடையவரே! வஞ்சமும் லோபமும் அறிவின்மையுமுடையவர்களிடம் பொருளைக் குறித்துச் சென்று, மஞ்சரி, கோலை, தூது முதலிய பிரபந்தகளைப் பாடி, பாரி காரி என்ற வள்ளல்கள் நீவிரே என்று புகழ்ந்து வாது செய்து, புகழ்ந்து பாடுவோராகிய வந்தியர்களைப் போல அவமே திரிந்து அழியாமல், தேவரீருடைய சிவந்த சீறடியையும், நாதகீதமுடைய கிண்கிணியையும் கடப்ப மலர் மாலையும் சிறந்த வலிபெற்ற வேலையும், மயிலையும், அறுமுகங்களையும் செந்தமிழ் மொழியால் நாள்தோறும் பரவிப்பாடி அடியேன் உய்யுமாறு மெய்ஞஞானம் ஊற்றெடுகின்ற சிவந்த திருவாக்கால் இணையற்ற ஒரு மொழியை உபதேசித்து அருள்புரிவீர். |