வஞ்சக லோப மூடர்:- செல்வத்தை நிரம்ப வுடையவர்களாயிருந்தும், வஞ்சகமும், உலோபத்தனமும், அறிவின்மையும் உடையவர்களிடம் சென்று, காமதேனுவின் பாலைக் கமரில் கவிழ்ந்தது போல் அருமையான தமிழால், மஞ்சரி, கோவை, பரணி, தூது, மாலை முதலிய பிரபந்தங்களை அவ்வுலோபர்மீது பாடி வறிதேயழிகின்றதை சுவாமிகள் இப்பாடலில் நன்று கண்டிக்கின்றார். முருகனைப் பாடினால் இம்மையில் சோறுங் கூறையுந்தந்து இடர் கெடுத்து, எம்பெருமான் மறுமையில் சிவகதியையும் வழங்குவர். தம்மையே புகழ்ந்திச்சை பேசினுஞ் சார்வினுந் தொண்டர் தருகிலாப் பொய்ம்மை யாளரைப் பாடாதே யெந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள் இம்மையே தரும்சோறும் கூறையும் ஏத்தலாம் இடர் கெடலுமாம் அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவில்லையே மிடுக்கிலாதானை வீமனேவிறல் விசயனே வில்லுக் கிவனென்று கொடுக்கிலாதானைப் பாரரியே யென்று கூறினுங் கொடுப்பா ரிலை. - சுந்தரர் வண்புகழ் பாரி:- பாரி பாரி பறம்பு நாட்டை யாண்டவன்; பெரிய வீரம்; இவன் வேளீர் வழி வந்த வனாதலால் “பாரிவேல்” வேள்பாரி” என்று கூறுவர். மூவேந்தரையும் வென்று புகழ்மாலை சூடியவன்; கபிலர் என்னும் செந்தமிழ் புலவரை நண்பராக உடையவன்; எல்லா வகையிலுஞ் சிறந்தவன். இல்லையென்றார்க்கு இல்லை என்னாது வழங்கும் பெருவள்ளல். பறம்பு நாட்டிற்கு 300 ஊர்கள் உண்டு. அந்த முன்னூறு ஊர்களைப் பரிசில்களாகப் பலர்க்கு வழங்கி விட்ட பெருங் கொடையாளி. பாரி வள்ளல்ஒருநாள் பொற்றேரின் மீது ஏறிக்கொண்டு கானகஞ் சென்றான். அங்கே உலாவிக் கொண்டு வந்தான். ஆங்கு ஒரு முல்லைப்பூங்கொடி கொழு கொம்பு இல்லாமல் காற்றால் அலைந்து கொண்டிருந்தது. பாரி அதனைக் கண்டான். கருணை |