துரும்பைத் தூண்என்றும், தூணைத் துரும்பென்றும், கரும்பை இரும்பென்றும், இரும்பைக் கரும்பென்றும் பேசி வாதம் புரிவார்கள். கொஞ்சியே:- குழந்தைகள்கொஞ்சிப் பேசுவதைப்போல், ஆடவரிடம் மழலை மொழியால் கொஞ்சிப் பேசி மயக்குவார்கள். காமலீலைகள் வந்தியர்:- வந்தித்தல்-புகழ்தல். ஆசையுடன், ஆடல்களை ஆடியும், பாடல்களைப் பாடியும் புகழ்ந்து கூறுவர். புகழ்ந்து பாடுவோர்க்கு வந்தியர் என்று பெயர். ஆசை ஆடல்களைப் புகழ்ந்து கூறித் திரிவோர். பஞ்சமா பாவமே தரு கொங்கை:- பொது மகளிரது தனங்களை விரும்புவதனால் ஐம்பெரும் பாவங்களும் விளையும். ஆசைவசப்பட்டு கொலை, களவுகள், பொய், சூது ஆகிய மாபதங்களை ஆடவர்கள் புரிவார்கள். பந்தியாய் வானுளோர் தொழ:- தேவர்கள்கடப்பமலர் மாலைகளைத் தனித்தனியே கரங்களில் ஏந்திக்கொண்டு முருகனைத் தொழும் பொருட்டு வருகின்றார்கள். தனித்தனியே வந்தவர்களை முறையே வணங்குமாறு வீரவாகு தேவர் பணிக்கின்றார். வரிசையாகக் கடப்பமலர் மாலையைச் சூட்டி வானவர்கள் வணங்குகின்றார்கள். ........................................................”மயிலேறு மையன் காலுக் கணிகலம் வானோர்முடியும் கடம்பும்” - கந்தலங்காரம் (62) பண்பு சேர் பாத தாமரை யருள்வாயே:- நற்குணங்களின் சிகரமாகத் திகழ்வது பண்பு. அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பில்லாதவர். “பண்புடை மக்கட் பெறின்” - திருக்குறள் இத்தகைய இனிய பண்புக் திரண்டு புகலிடமாக முருகன் திருவடிகளில் சென்று சேர்ந்தன. சூரனானவ னுய்ஞ்சு போகாலே யயில் அன்றுதான் ஏவி:- சூரனும் பன்மனும் முற்பிறப்பில் முருகப்பெருமானுக்கு மயிலும் சேவலுமாகித் தொண்டுபுரிய விரும்பி அளவற்ற அரும் பெருந்தவம் புரிந்தார்கள். |