அவ்விருவரும் சேர்ந்து சூரபன்மனாகப் பிறந்தனர். ஆயிரத்தெட்டு அண்டங்களையும், நூற்றெட்டு யுகங்கள் அரசு புரிந்தான் சூரபன்மன். முருகவேள் அவனை அரக்கனாகவே இருந்து பிழைக்கா வண்ணம், வேலால் தடிந்து, முற்பிறப்பில் செய்த தவத்தில் காரணத்தால் சேவலும் மயிலுமாக்கி ஆட்கொண்டருளினார். முன் தேவர்கள் சூரபன்மனை அச்சத்தால் வணங்கினார்கள். இப்போது “சேவலும் மயிலும் போற்றி” என்று அன்பினால் வணங்குகின்றார்கள். மேலானவாழ் வருள் அண்டர்கோவே:- தேவர்களையும் தேவ மாதர்களையும் சூரன் சிறையில் அடைத்துப் பெருந்துன்பம் விளைத்தான். இனி நமக்கு வாழ்வு இல்லையென்று கருதித் துன்பக் கடலில் அழுந்தி வேதனையுற்றார்கள். முருகவேள் சூரனைத் தடிந்து, தேவர் சிறை தீர்த்து உயர்ந்த வாழ்வினை வழங்கி அருள்புரிந்தருளினார். தேவ தேவ தேவாதி தேவனாக விளங்கும் தனிப் பெருந் தெய்வசிகாமணி முருகவேள். கொஞ்சவே காலின்மேவு சதங்கதானாட ஆடிய கொன்றையானாளுமே மகிழ் புதல்வோனே:- உலகமெல்லாம் அசையும் பொருட்டு இறைவன் அசைந்து ஆடுகின்றான். உலகின் நடு இடத்தில் அப்பரம பதி ஆடுகின்றான். குன்று தோறாடல் மேவிய:- மன்று தோறாடுகின்ற மணிகண்டரது மகனார், குன்று தோறாடுகின்ற குகனார். கருத்துரை குன்று தோறும் ஆடிய குமரவேளே! மாதர் மயல்அற உனது பாதமலரைத் தருவீர். |