பழமுதிர்சோலை (ஆறாவது படைவீடு) மதுரைக்கு வடக்கே 12 கல் தொலைவில் உள்ளது. மிகவும் அரிய திருத்தலம்.பரிபாடல் முதலிய பல நூல்களில் இத்தலம் கூறப்பட்டுள்ளது. இங்குள்ள சுனை நூபுரகங்கள் எனப்படும். மதுரையிலிருந்து போகவர பஸ் வசதி உண்டு. வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் மாயம தொழிந்து தெளியேனே மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மாபத மணிந்து பணியேனே ஆதியொடு மந்த மாகிய நலங்கள் ஆறுமுக மென்று தெரியேனே ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட தாடுமயி லென்ப தறியேனே நாதமொடு விந்து வானவுடல் கொண்டு நானில மலைந்து திரிவேனே நாகமணி கின்ற நாதநிலை கண்டு நாடியதில் நின்று தொழுகேனே சோதியுணர்கின்ற வாழ்சிவ மென்ற சோகமது தந்து எனையாள்வாய் சூரர்குலம் வென்று வாகையொடு சென்று சோலைமலை நின்ற பெருமாளே. பதவுரை சூரர் குலம்வென்று-சூரபன்மனாதி யவுணர் குலத்தையழித்து வெற்றிபெற்று, வாகையொடு-வெற்றிமாலை சூடிச்சென்று, சோலை மலைநின்ற-பழமுதிர் சோலை என்னும் திருமலை மீது எழுந்தருளிநின்ற, பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! வாதினை அடர்ந்த-வாதுபுரியும் தன்மையே நிறைந்த, வேல்விழியர் தங்கள்-வேல் போன்ற கண்களுடைய பெண்களினால் வரும், மாயம் அது ஒழிந்து - மாயத்தை அறவே நீங்கி, தெளியேன்-அடியேன் தெளிவடையவில்லை; மாமலர்கள் கொண்டு-பெருமையுடைய மலர்களைக் கொண்டு, |