பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 353

 

மாலைகள் புனைந்து-திருமாமலைகள் தொடுத்து, மாபதம் அணிந்து- தேவரீருடைய பெருமைமிக்க திருவடிகளிற் சூட்டி, பணியேன்-அடியேன் ஒருபோதும் பணிந்திலேன், ஆதியொடும் அந்தம் ஆகிய நலன்கள் - முற்றறிவுடைமை முதலாக முடிவிலாற்றலுடையை ஈறாகவுள்ள ஆறு அருட்குணங்களே ஆறுமுகம் என்று-தேவரீருக்கு ஆறுமுகங்களாக அமைந்திருக்கின்றன என்பதை, தெரியேன், அடியேன் இதுகாறும் தெரிந்து கொள்ளாதிருந்தேன், ஆன தனி மந்தரரூப நிலைகொண்டு-எல்லாக் கலைகளுக்கும் எல்லா தேவர்களுக்கும் பிறப்பிடமாக விளங்கும் ஒப்பற்ற ஒருமொழியாகிய ஓங்கார வடிவத்தைக் கொண்டு, அது ஆடும் மயில் என்பது அறிவேன்-அந்த மயில் ஆடும் என்பதை அடியேன் அறிந்துகொண்டேனில்லை; நாதமொடு விந்து ஆன உடல் கொண்டு- நாதவிந்துக்களான உடம்பை நிலையெனக் கொண்டு, நால் நிலம் அலைந்து- நான்கு வகையான திணைகளுடன் கூடிய பூ மண்டலத்தில் வீணே அலைந்து, திரிவேன்-அடியேன் திரிந்து கெடுகின்றேன். ந அகம் அணிகின்ற நாத-நான் அல்ல என்று அன்பர்கள் அர்ச்சிக்கும் சீவபோதமாகிய மலரைஅணிகின்ற தவைலவே! நிலைகண்டு-தேவரீருடைய நிலையைக் கண்டு, நாடி அதில் நின்று- அந்நிலையை உற்றுப்பார்த்து அவ்வகப்பார்வையில் நிலைத்துச் சலனமற்று நின்று, தொழுகேன், ஒருபோதும் தொழுதேனில்லை; சோதி உணர்கின்ற வாழ்வு-அருட்சோதியை உணர்கின்ற சுகவாழ்வே, சிவம் என்ற-மங்கலம் என்று கூறுகின்ற, ச அகம் அது தந்து-அது நான் என்ற சிவோகம் பாவனையைத் தந்து, எனை ஆள்வாய் - அடியேனை ஆட்கொண்டருள்வீர்.

பொழிப்புரை

சூரபன்மனாதி யவுணர்களின் குலத்தை வேருடன் களைந்து வெற்றிமாலை சூடிக்கொண்டு வந்து பழமுதிர் சோலையென்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமிதமுடையவரே! வாது செய்யுந் தன்மை நிறைந்த வேல் போன்ற கூரிய கண்களையுடைய பெண்களின் மாயையை அறவே ஒழித்து தெளிவு பெற்றேனில்லை; பெருமை தங்கிய நறுமலர்கள் எடுத்து திருமாலைகளாகத் தொடுத்து தேவரீருடைய பெருமைமிகுந்த திருவடிகளில் அணிந்து தொழுகின்றேனில்லை; முற்றறிவு முதலாக முடிவிலாற்றலுடைமை ஈறாகவுள்ள அருட்குணங்கள் ஆறுமே ஆறு திருமுகங்களாக அமைந்தன என்பதை அறிந்தேனில்லை; எல்லாக் கலைகட்கும் பிறப்பிடமான ஓகாதவடிவத்தைக் கொண்டு தேவரீருடைய ஊர்தியாகிய மயில் ஆடுகின்றது என்ற நுட்பத்தையும் அடியேன் உணர்கின்றேனில்லை; நாதவிந்துக்