வல்ல பிரானாகிய மயிலேறும் பெருமாளுடைய மலரடியில் மலர்மாலை சூட்டி வணஞ்குவதேயாம். வணக்கம் மலருடன் சேர்ந்து புரிய வேண்டும். கைகாள் கூப்பித்தொழீர்-கடி மாமலர் தூவிநின்று பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் கைகாள் கூப்பித்தொழீர். அன்பர்கள் அதிகாலை யெழுந்து நீராடி சிவபூசை செய்து, திருநந்தவனம் புகுந்து வாசமலர் வகைவகையாக எடுத்துத் தொடுத்துக் கூடையில் நிரப்பி இறைவன் திருக்கோயிலுக்குச் சுமந்தேகுவர். நீநாளு நன்னெஞ்சே நினைகண்டா யாரறிவார் சாநாளும் வாழ்நாளும் சாய்க்காட்டெம் பெருமாற்கே பூநாளும் தலைசுமப்பப் புகழ்நாமஞ் செவிகேட்ப நாநளு நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே. - சம்பந்தர் ஆதியோடு மந்தமாகிய நலங்கள் ஆறுமுகம்:- 1.கந்தபெருமானுடைய கருணைகூர் முகங்கள் ஆறும் ஆறுகுணங்களே என்ப. அவ்வருட்குணங்கள் ஏனைய தேவர்களிடம் இல்லை. ஏவர் தம் பாலு மின்றி யெல்லைதீ ரமலாற் குள்ள மூவிரு குணனுஞ்சேய்க்கு முகங்களாய் வந்த தென்னப் பூவில் சரவ ணத்தண் பொய்கையில் வைகு மையன் ஆவிகட் கருளு மாற்றால் அறுமுகங் கொண்டா னன்றே. - கந்தபுராணம். அவ்வருட் குணங்களாவன:- 1.முற்றறி வுடைமை 2.வரம்பிலின்ப முடைமை 3.இயல்பாகவவே பாசங்களில் நீங்குதல், 4.தம்வயமுடைமை 5.பேரரு ளுடைமை 6.முடிவி லாற்ற லுடைமை இதனை வடமொழியில் முறையே சருவஞ்ஞதை, திருப்தி, அநாதிபோதம், சுவதந்திரத்வம், அலுப்தசக்தி, அநந்தசக்தி என்பர். ஸர்வக்ஞதா த்ருப்தி ரநாதிபோத; ஸவதந்த்ரதா நித்ய மலுப்த சக்தி;! அநந்த சக்திஸ்ச நிராமயாத்மா விசுத்த தேஹஸ்ஸசிவத்வமேதி!! - சர்வஞானோத்தராகமம். |