என்னும் குடிலையில் சொரூபமாக மயில் ஆடுகின்றது. மயில் ஆடுகின்ற பொழுது உற்றுக்கவனியுங்கள்; அதன் முகத்திலிருந்து தொடர்ங்கி விரிந்துள்ள தோகைவழியே போய் காலில் வந்து முடிந்தால் ஓகாரமாகும். அவ்வோங்காரத்தின் நடுவே ஆண்டவன் அருட்ஜோதி மயமாக வீற்றிருக்கின்றனன். இந்த நுட்பத்தை அழகாகத் தெரிவிக்கின்றார். “ஆனதனிமந்த்ர ரூபநிலைகொண்ட தாடுமயிலென்ப தறியேனே” “ஓகார பரியின்மிசை வரவேணும்” என்றார் பிறிதோரிடத்தில். நாகமணிகின்ற நாதநிலைகண்டு:- நாகம் அணிகின்ற நாத என்ற சொல்லுக்கு அடியில் வருமாறு பல பொருள்கள் கூறலாம். (1)நாகம்-பாம்பு; சர்ப்பாபரணத்தை யணிகின்ற நாதரே! (2)சர்ப்பத்தை அணிதலின் பொருளாகிய நாதத்தின் இருப்பிடத்தைக் கண்டு; (சுத்தமாயையின் அந்தமாயுள்ள நாதத்ததுவத்தின் இருப்பிடங்கண்டு), நாகம் என்பது குண்டலினி-சுத்தமாயை. அதாவது பிராணாயாமஞ் செய்வதனால் பாம்பு மண்டல மிட்டுப் படுத்திருப்பதுபோலுள்ள குண்டலி நடுவிலுள்ள தீ மண்டி எழுந்திருக்க, அதனால் எழும் பிரம்ம நாதத்தைக் கேட்டு சிவயோகிகள் இன்புறுவர். 2.நாஹம் என்ற சொல் தமிழில் நாகம் என வந்தது. இதே பாடலில் 14 ஆவது வரியில் சோஹம் என்ற சொல் சோகமென வந்திருப்பதையுங்காண்க. ந-அஹம் என்பதும் நாஹம்; அஹம-நான்; ந-அல்ல; நாஹம்-நானல்ல; அடியார்கள் இறைவன் திருவடியில் நானல்ல என்ற சிவபோதத்தை ஒரு மலராக அர்ச்சிப்பர். “பாதமலர் மீதிற் போதமலர்தூவிப் பாடுமலர்தோழத் தம்பிரானே” - (ஆலவிழி) திருப்புகழ் என்று சுவாமிகளே பிறிதொரு திருப்புகழில் இங்ஙனம் கூறியருளுகின்றார். நாடியதில் நின்று தொழுகேனே:- சீவபோ தமிழந்த நிலையில் காண்பான், காட்சி, காட்சிப் பொருள் என்ற மூன்றுமற்ற நிலையில் நின்று தன்மயமாக விளங்கித் தொழுதல். |