“படைத்தளித் தழிக்குந்த்ரிமூர்த்திகள் தம்பிரானே” - (கனைத்ததிர்க்கு) திருப்புகழ் “மன்னா வயற்பதிமன்னா குறத்தியின் மன்னா முவர்க்கொரு தம்பிரானே” - (என்னால்பிறக்கவும்) திருப்புகழ் “அரியா பிரமபுரந்தராதியர் கும்பிடுந் தம்பிரானே” - (கரிபுரி) திருப்புகழ் இகரமுமாகி:- ஓராதார்க்குற்தூரமாகிநின்ற இறைவன் உன்னுவார்க்கு அதி சமீபத்தில் இருக்கின்றான். “வீசத்தில் தூர மிலாதது” - (வேதத்திற்) திருப்புகழ் எவைகளுமாகி:- முருகன் அங்கிங் கெனாதபடி எங்கும் நிறைந்து விளங்குபவராதலால் ”எவைகளுமாகி” என்றார். “எப்பொருளுமாய” என்றார் பிறிதோரிடத்தில். இனிமையுமாகி:- முருகன் அன்பர்கள் உணர்வில். இனிக்கும் இனியனாய் இலங்குகின்றனன். கனியினும் இடினியன்; கடிபட்ட கரும்பினும் இனியன்; பனிமலர்க்குழல் பாவையரினும் இனியன்; தனிமுடி கவித்தாளும் அரசினும் இனியன்; உயிரினும் இனியன்; கனியினும் கட்டிபட்ட கரும்பினும் பனிமலர்க்குழல் பாவை நல்லரினும் தனிமுடி கவித்தாளு மரசினும் இனியன் நன்னடைந்தார்க்கிடைமருதனே என்னி லாரு மெனக்கினி யாரில்லை என்னிலும் மினி யானொரு வன்னுளன என்னு ளேயுயிர்ப்பாய்ப்புறம் போந்துபுக் கென்னு ளேநிற்கு மின்னம்ப ரீசனே. - அப்பர் எளியனும் வாழ எனதுமுனோடி வரவேணும்:- எளியனும் என்ற எச்ச உம்மையால் மற்ற ஆன்மாக்களும் என்று வருவிக்கப்பட்டது. வையகமெல்லாம் வாழவேண்டுவதே ஆன்றோர் மரபு. “வையகமும் துயர் தீர்க” என்றார் திருஞான சம்பந்தர். விரைந்து இறைவனைக் காண விரும்புகின்றார் ஆதலின் “ஓடிவரவேணும்”என்று அழைக்கின்றார். |