சியில் பேர் பெற்ற லீலைகளுடன் கூடிய பொது மாதர்களுடைய, கலவியில் மூழ்கி ஆழ்கின்ற இழிந்த தொழிலையுடைய அடியேன், மேலாகக் கருதுகின்ற ஞான அறிவை அடைவேனோ?” விரிவுரை இலவிதம் கோதி:- இலவ மலர் சிவப்பாக இருக்கும்; அது மிகவும் அழகாக இருக்கும். அது பெண்களின் இதழுக்கு உவமையாக இலக்கியங்களில் வரும். ஞான போத மடைவேனோ:- ஆன்மா சிவஞான போதத்த யடைதல் வேண்டும். அங்ஙனம் அடைந்த ஆன்மா மல பரிபாக முற்று, சத்தினி பாதம் பெற்று சிவாத்துவிதமெய்திப் பேரின்பத்தைத் துய்க்கின்றது. இப்பாடலின் பிற்பகுதி அம்பிகையின் திருநாமங்களை அழகாகக் கூறுகின்றது. கருத்துரை பழமுதிர் சோலைப்பரமனே! சிவஞான போதத்தைத் தந்தருள்வீர். காரணம தாக வந்து புவிமீதே காலனணு காதி சைந்து கதிகாண நாரணனும் வேதன் முன்பு தெரியாத ஞானநட மேபு ரிந்து வருவாயே ஆரமுத மான தந்தி மணவாளா ஆறுமுக மாறி ரண்டு விழியோனே சூரர்கிளை மாள வென்ற கதிர்வேலா சோலைமலை மேவி நின்ற பெருமாளே. பதவுரை ஆர் அமுதம் ஆன-நிறைந்த அமுதம் ஆகிய, தந்தி- தெய்வயானையம்மையின், மணவாளா-கணவரே! ஆறுமுகம்-ஆறுமுகங்களும், ஆறிரண்டு விழியோனே-பன்னிருகண்களையும் உடையவரே! சூரர் கிளை மாள வென்ற-சூராதியவுணர்களும் அவர்களின் சுற்றங்களும் அழியும்படி வெற்றி பெற்ற, கதிர்வேலா-ஒளிமிகுந்த வேலாயுதரே! சோலைமலை மேவி நின்ற- பழமுதிர் சோலை மலையின்மீது எழுந்தருளியுள்ள, பெருமாளே-பெருமையின் மிகுந்தவரே! காரணம் |