அது ஆக புவிமீது வந்து-ஊழ்வினையின் காரணத்தினால் இப்பூதலத்தில் வந்து பிறந்து, காலன் அணுகாது-இயமனுடைய அமைச்சன் என்னை நெருங்காதபடி, இசைந்து, தேவரீர் மனம் பொருந்தி, கதி காண-அடியேன் நற்கதியை அடையுமாறு, நாரணனும் வேதன் முன்பு தெரியாத-திருமாலும் பிரமதேவனும் முன்பு கண்டறியாத, ஞான நடனமே புரிந்து வருவாயே-ஞானநடனஞ் செய்து வந்தருளுவீராக. பொழிப்புரை நிறைந்த அமுதம் போன்ற இனிய தெய்வயானையம்மையின் கணவரே! ஆறுதிருமுகங்களையும் பன்னிரு கண்களையும் உடையவரே! சூராதியவுணரும் அவர்களின் சுற்றமும் மாளும்படி வென்ற ஒளி நிறைந்த வேலாயுதரே! சோலை மலையில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே! வினையின் காரணமாக அடியேன் இப்பூமியில் பிறந்து, வினைப் போகம் முடிந்தபின் என்னைப் பற்றவருகின்ற காலன் வசம் நான் அடையாவண்ணம் தேவரீர் திருவுள்ளம் இரங்கி, மாலும் அயனும் முன் கண்டறியாத ஞானத் திருநடனஞ் செய்து வந்தருளுவீராக. விரிவுரை காரமதாக வந்து புலிமீதே:- ஒவ்வொரு உயிரும், தாம் செய்தவினையின் காரணத்தினால் வந்து மண்ணுலகில் பிறக்கின்றது. நமது சைவ சித்தாந்தக் கொள்கையில் அடிப்படையான தத்துவங்கள் நான்கு. செய்வான், செய்வினை, வினைப்பயன், பயன்அறிந்து ஊட்டுபவன். செய்வன்-ஆன்மா. செய்வினை-ஆன்மா செய்தவினை. வினைப்பயன்-அவ்வினையின் பயன். அறிந்து ஊட்டுபவன்-இறைவன் வினை சடம்ஆதலின் தானே வந்து பொருந்தாது. சிற்றிவுடைய ஆன்மாவுக்கும் முற்பிறப்பில் செய்தவினை இது என உணர்ந்து நுகரும் ஆற்றலும் அறிவும் இல்லை. ஆதலின் பேரறிவும் பெருங்கருணையும் பேராற்றலும் படைத்த இறைவன் காலமறிந்து இடமறிந்து அளவறிந்து வினைப்பயனை ஆன்மாவுக்கு ஊட்டுகின்றான். செய்வினையுஞ் செய்வானும் அதன்பயனும் சேர்ப்பானும் மெய்வகையால் நான்காகும் விதித்த பொருள் எனக்கொண்டே |