பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 373

 

பொருந்திய கண்டத்தை யுடையவரும், அழகிய நீண்ட சபையில் நடனம் புரிகின்ற ஈசருமாகிய தந்தையர், மகிழ்ச்சி மிகவும் அடையுமாறு, சிறந்த உபதேச மொழியை உபதேசித்தருளி, சோலைமலையில் எழுந்தருளியிருக்கும், கந்தக்கடவுளே, ஆதி முதல்வராக விளங்கும் பெருமிதமுடையவரே! நல்லொழுக்கமுள்ள தாய், தந்தை, மனைவி, மக்கள், வீடு சேர்ந்துள்ள பொருள்கள், இவற்றில் ஆசைகொண்டு, மனம் தடுமாற்றம் அடைந்து, தீமையைத் தரும் மாயையால், இவ்வாழ்வே நிலையானதாம் என்று எண்ணி, தேடிய பொருள் யாவும் தொலைந்து போகவேண்டி, நடுத் தெருவில், இளம் வயதினராய் தனங்கள் மேருமலை போலவும், நெற்றி பிறைச் சந்திரனைப் போலவும் கொண்டுள்ள, மாதர்களின் மீதுள்ள காம மயக்கத்தால் எளியேனுடைய சிந்தை மெலிந்து போகாமல், என்றுமுள்ள மயிலின் மீது தேவரீர் வந்து உமது பாதங்கள் இரண்டையும் பணிகின்ற அடியேனுடைய மாயவினை அழியுமாறு அன்பைத் தந்தருளுவீராக.

விரிவுரை

சீலமுளதாயர்:-

சீலம் - சிறந்த ஒழுக்கம். தாயாரைப் பற்றிக் கூறும் போது, ஒழுக்கமுள்ள அன்னை யென்று கூறுகின்றார்.

பிறிதொரு திருப்புகழிலும், தாயின் கருணையைக் கூறுகின்றார்.

“தந்த பசிதனை யறிந்து முலையமுது
   தந்து முதுகுதடவி தாயார்”                   திருப்புகழ்

சுற்றத்தார் முதலிய தொடர்களால் மனம் தடுமாறு கின்றது.

வாழ்வு சதமாமிதென்று:-

உலகில் உள்ள பொருள்கள் யாவும் சதமல்ல, சதமல்லாதவற்றை சதம் என்று எண்ணி மாந்தர் அலைகின்றனர்.

ஊருஞ்சதமல்ல உற்றார்சதமல்ல உற்றுப்பெற்ற
பேருஞ்சதமல்ல பெண்டீர்ச்தமல்ல; பிள்ளைகளும்
சீருஞ்சதமல்ல செல்வஞ்சதமல்ல தேசத்திலே
யாருஞ்சதமல்ல நின்தாள்சதங்கச்சி யேகம்பனே    - பட்டினத்தார்

அமரேசர் தங்களூரி தெனவாழ்வுகந்த:-

அமரர்கள் தங்கள் ஊர்கள் இந்திர நகரம் போல் இருக்கின்றன என்று மகிழ்கின்றார்கள்.