பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 375

 

மயில் ஏறி வந்து-மயிலில் ஏறிவந்து, சோலை மலைமேல் அமர்ந்த, சோலைமலைமீது வீற்றிருக்கின்ற, பெருமாளே-பெருமயின் மிகுந்தவரே! வீர மதன் நூல் விளம்பு-வீரம் பொருந்திய மன்மதனுடைய நூல்களில் சொல்லப்பட்ட, போகமட மாதர் தங்கள்-போகத்தைத் தருகின்ற மடமாதர்களின், வேல் விழியினால் மயங்கி-வேல் போன்ற கண்ணால் மயக்கத்தை யடைந்து, புவிமீதே-இப்பூமியின் மேல்-வீசுகையினால்-கைகளை வீசி, இதங்கள் பேசும்- இன்பமான வார்த்தைகளைப் பேசும் அவர் வாய் இதம் சொல்- அப்பொதுமாதர்களின் வாயினின்று பிறக்கும் இன்ப மொழிகட்கு இணங்கி, வேலை செய்து-அவர்கள் இட்ட வேலைகளைச் செய்து-மால் மிகுந்து விரகு ஆகி-அவர்மேல் ஆசை மிகுந்து ஊக்கம் புண்டு, பாரவசம் ஆன-கனத்த தன்மை கொண்டு, அங்கண் நீடு பொருள் போன பின்பு-அங்கு மிகுதியாக இருந்த பொருள் செலவழிந்த பின்னர், பாதகனும் ஆகி நின்று பதையாமல்- அடியேன் பாதகனாய் நின்று தவிக்காமல், பாகம் வர அன்பு சேர்-பக்குவ நிலையைத் தரவல்ல அன்பு வந்து என்னிடம் பொருந்த, நீபமலர் சூடு-கடப்ப மலர் சூடியுள்ளதும், தண்டை-தண்டையணிந்ததுமான, பாக மலர் நாடி-உமது பாதாரவிந்தத்தை அடியேன் விரும்பி, என்று பணிவேனோ-எந்நாள் பணிவேனோ?

பொழிப்புரை

தேயாமலும் வளராமலும் என்றும் ஒன்று போலிருக்கும் சந்திரனைத் தரித்த சிவபெருமானுடைய இடப்பாகத்தைக் கொண்டவரும், நாகணவாய்ப் பறவை போல் விளங்குபவருமாகிய உமாதேவியாரது திருவருளால் வளர்ந்த திருமருகரே! இந்த மண்ணுலக முழுவதும் ஒரு அடியால் அளந்தருளிய, காயம்பூ வண்ணராகிய திருமாலின் திருமருகரே! சூராதியவுணர்களின் கூட்டங்களை அழித்து, அவர்களின் பருத்த தலைகளை அறுத்து, பொடியாகப் போகுமாறு செய்து கூரிய வேற்படை விரரே! சோலைகளில் பறந்து உலாவுகின்ற மயிலின் மீது ஏறி வந்து சோலை மலையில் எழுந்தருளியுள்ள, பெருமிதம் உடையவரே! வீரம் பொருந்திய மன்மதனுடைய நூல்களில் சொல்லப்பட்ட, போக இன்பத்தைத் தரவல்ல பொது மாதர்களின் வேல் போன்ற கண்களினால் மயக்கமுற்று, இப்பூமியின்மேல், கைவீசி இதமாகப் பேசும் அவ்விலை மாதர்களின் வாக்கிலிருந்து பிறக்கும், இனிய மொழிகளுக்கு இணங்கி, அவர் இட்ட வேலைகளைச் செய்து அவர்மீது ஆசை மிகுந்து ஊக்கமாக, என்பால் மிகுந்திருந்த செல்வத்தை அவர்கட்கு ஈந்து, அவை போன பின் பாதகனாகி