பக்கம் எண் :


376 திருப்புகழ் விரிவுரை

 

நின்று அடியேன் தவிக்காமல், பக்குவநிலை வருவதற்குரிய அன்பு என்பால் வந்துசேர, கடப்பமலரையும் தண்டையையும் அணிந்த உமது திருவடியை நாடி என்று அடியேன் வணங்குவேனோ!

விரிவுரை

வீரமதனூல் விளம்பு போகம்:-

மன்மதன் கடுந்துறவிகளையும், வீர தீரமன்னர்களையும் தன் மலர்க் கணையால் வெற்றி பெறுகின்றான். ஆதலினால் விரமதன் என்றார்.

மதனூல்-காமசாத்திரம். அம் மதனாகமத்தில் கூறியுள்ளபடி பலப்பல இன்பங்களைப் பொது மாதர் வருவார்கள்.

வேல்விழியினால் மயங்கி:-

மாதரது கூரிய கண்களால் இளைஞர் மயங்குவார்கள்.

“விழியாலுருக்குபவர்”  -(குமரகுருபரமுருககுகனே) திருப்புகழ்

வேலை செய்து:-

அம்மாதர்கள் இட்ட வேலைகளைத் தெய்வகைங்கரியம் போல் செய்து திரிவார்கள்.

“வசமொழுகி யவரடிமையென மாத ரிட்டதொழில்
   தனிலுலலு மசடனை”     - (குமரகுருபரமுருககுகனே) திருப்புகழ்

நீடு பொருள் போனபின்பு:-

அரிதில் முயன்று பெரியோர்கள் தேடிய பொருள்கள் முழுவதையும் அம்மாதரிடங் கொட்டிக் கொடுத்து வறியவர் ஆவார்கள்.

“மதிக்குளறி யுளகாசு மவர்க்குதவி மிடியாகி
   வயிற்றிலெரி மிகமூள”         - (வரிக்கலையி) திருப்புகழ்

பாகம்வர சேர அன்பு:-

பாகம்-பக்குவம். ஆன்மாவுக்கு இருவினையொப்பு எய்திய பின் மலபரிபாகம் உண்டாகும்; அப்போது சத்திநிபாதம் எய்தும், அப்பக்குவ நிலையில் முறுகியஅன்பு சேரும். அன்பு சேர சிவமாம் பெற்றியால் இன்பம் சேரும்.

“உணக்கிலாத தொர்வித்துமேல் விளையாமல் என்வினை
                                                          ஒத்தபின்
   கணக்கிலாத் திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே”
                                                                 - திருவாசகம்

பூரணமான திங்கள்:-

இங்கே குறைமதியை நிறைமதியென்றார். என்றும் ஒரு படியாய் இருக்கின்ற மதி என்று பொருள் கொள்ள வேண்டும்.