இராவணனால் அசைவுற்றது, மன்மதனுடைய மகுடத்தை ஒப்பிடலாம் என்றால், அது சிவபிரானால் எரிந்து சாய்ந்து வீழ்ந்தது! சக்கரவாளகிரி, போலத் தேவலோகம் அண்டகோளம் வரை நிமிர்ந்தெழுந்து, மகா தவமுனிவர்களும், தமது தரும நெறியை விட்டுவிலகி நிலை குலையவும், பூரண கும்பத்தையும் வென்று, குளிர்ந்த சந்தனக் கலவையணிந்து, காமலீலைப் போரினை விரும்பும் தனங்களையுடைய, பெண்களின், இன்பநுகரும் படுக்கையைவிட்டு நீங்கி, தேவரீருடைய பொன்மயமான திருவடியை வணங்கி, அத்திருவடியைப் பூசிக்குந் தொண்டன் இவன் என்னும் ஒரு நாள் எனக்கு உண்டாகுமோ? விரிவுரை இத்திருப்புகழில் முதல் மூன்று அடிகள் மாதரின் தன பாரத்தின் பெருமையை அதியற்புதமாகக் கூறும் கவித்திறம் மிகவும் சிந்தனைக்குரியது. வாரணமுகங்கிழிந்து விழவும்:- யானையின் யத்தகத்தை தனத்துக்கு உவமை கூறுவது கவிமரபு. யானை மத்தகத்தை உவமை கூறுவதில் ஒரு குற்றம் உளது. அது என்ன? யானையைச் சிவபெருமான உரித்துக் கிழித்தார். அப்போது யானை அழிந்து வீழ்ந்தது. அதனால் யானையின் முகம் தனத்துக்கு, ஒப்பாகாது. அரும்பலர்ந்து:- தாமரையின் மொட்டு தனத்துக்கு உவமையாகும். அதிலும் ஒரு குற்றம் உளது. அது என்ன? தாமரையின் மொட்டு மலர்ந்து மறுநாள் வாடி விடுகின்றது. தனம் மலராமலும் வாடாமலும் இருப்பதனால் அத்தாமரையில் மொட்டு இணையாகாது. மால்வரை அசைந்து:- மலைகளைத் தனங்கட்கு உவமை கூறுவர் புலவர். அதிலும் ஒரு குறையுளது? அது என்ன? கயிலைமலை இராவணனால் அசைவுற்றது. இந்திரன் மலைகளின் சிறகுகளை வச்சிரத்தால் அரிந்தபோது மலைகள் அசைந்தன. தனங்கட்கு அப்படி ஒரு குறையின்மையால் மலைகளும் இத்தனத்துக்கு நிகரில்லை. அநங்கன் முடிசாய:- |