பழநிமலை, குறுக்கை-குறுக்கை, திருநாவலூர்-திருநாவலூர், திருவெணெய்ப் பதியில்-திருவெண்ணெய் நல்லூர், என்னுந் திருத்தலங்களிலும், மிக்க திகழ் காதல் சோலை வளர் வெற்பின் உறை-மிகவும் திகழ்கின்றதும் அன்பை விளைவிப்பதும் சோலை வளர்கின்றதுமாகிய பழமுதிர் சோலை என்னும் திருத்தலத்திலும் வாழ்கின்ற, முத்தா புகழ்-சீவன் முத்தர்களால் புகழ்ப்பெறுகின்ற, தம்பிரானே-தனிப்பெருந்தலைவரே! இன் ஒளிவீசி ஓடி இருபக்கம் ஓடு உற செல்வளி-இனிய ஒலியைப் பரப்பி இடை பிங்கலை என்னும் இரு நாடிகளின் வழியே ஓடிக்கழியும் வாயுவை, ஆசை நாலு சதுரக்கமலம் உற்று-நான்கு பக்கத்தையுடைய மூலாதாரத்திற் பொருந்தி, ஆவல்கூர-விருப்பமுற, மூணுபதியில்-அக்கினியாகி மூன்று மண்டலங்களிலுள்ள, மண்முதல் கலசம்-(அங்கிலுந்து சுழுமுனை நாடி வழியாக) சுவாதிஷ்டானம் முதல் ஆக்கினை யீறாகவுள்ள ஐவகைக் கமலங்களிலும், இந்து வாசை ஆர பொற்க பையும்-சந்திரகாந்தி நிறைந்த பொற்சபையும், கொளநிறுத்தி-பிரமந்திரக் கமலத்திலும் பொருந்த நிறுத்தி, வெளி ஆரு (ம்) சோதி நூறுபத்தினுடன் எட்டு இதழ் ஆகி ஏழும் அளவிட்டு-அப்பால் ஆயிரத்தெட்டு இதழோடுங் கூடிய சோதி நிறைந்த வெளியாகிய துவாதசாந்த கமலம் என ஏழுதலங்களையும் பொருந்தி, அருணவில் பதியில்-சூரியஒளி பொருந்திய பிரமந்திரத்தால் விந்து நாத ஓசையாலும், ஒரு சத்தம் அதிகப்படு இகம் ஓடு கூடீ-பிரமநாத ஓசைமிகுந்த சத்தம் அதிகப்படுகின்ற இடத்துடன் கூடி, ஒருமித்து அமுத சித்தியொடும்-மதிமண்டலத்தினின்றும் பெருகிப் பாயும் கலாமிர்தப் பேற்றுடன், வேதம் ஓது சரசத்தி அடி உற்ற திருநந்தி ஊடே-வேதம் சொல்லுகின்ற வாசி சத்திக்கு ஆதாரமாகவுள்ள ஸ்ரீ நந்தி ஒளியையும், ஊமையேனை ஒளிர்வித்து- ஊமையேனுக்குத் தெரிசிப்பித்து, உனது முத்தி பெற மூல வாசல் வெளியிட்டு- தேவரீருடைய முத்தியை அடியேன் பெற்றுய்யுமாறு பிரமரந்திர வெளிவிட்டு, உனது உரத்தில் ஒளிர்-உமது திருவருள் வலிமையினால் விளங்குகின்ற, யோக பேத வகை எட்டும் இதில் ஒட்டும் வகை-அஷ்டாங்கயோகமும் இதனுடன் பொருந்தும் வகையை, இன்று தாராய்-இன்று தந்தருளவேண்டும். பொழிப்புரை மதுரையம்பதியில் குதிரை வியாபாரியாக வந்து அரிமர்த்தன பாண்டியனிடம் குதிரை விற்று, அதனால் மகிழ்ச்சியுற்று மாணிக்கவாசகரை அடிமைகொண்ட கருணைக் கடவுளும், பொன்னார் மேனியரும், குதிரைச் சம்மட்டியினால் குதிரையைச் செலுத்துகின்ற வகையும் ஒளியும் உடைய சிவந்த திருக்கரத்தை யுடையவரும், ஆகிய சிவபெருமானுடைய இடப்பாகத்தில் வீற்றிருப்பவரும், அருட்சத்தியும், பொன்னிறமுடையவரும், |